18-வது மக்களவையில் தலைவருக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக எம்பி ஓம் பிர்லா வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு ஓம் பிர்லாவை பிரதமர் நரேந்திர மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
எதிர்க்கட்சிகள் மக்களவைத் துணைத் தலைவர் பதவியை கேட்ட நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கொடுக்க மறுத்ததால், நாட்டில் முதல்முறையாக மக்களவைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சி தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி தரப்பில் பாஜகவின் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி தரப்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷும் மக்களவைத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், இன்று காலை மக்களவைக் கூட்டம் தொடங்கியவுடன் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவராக ஓம் பிர்லாவை முன்மொழிந்தார். அதனை மத்திய அமைச்சர்களும் கூட்டணிக் கட்சிகளின் மக்களவைக் குழு தலைவர்களும் வழிமொழிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணி தரப்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷ் மக்களவைத் தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டது.
இதையடுத்து, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் மக்களவைக் குழுத் தலைவர்களும் சுரேஷை மக்களவைத் தலைவராக்க வழிமொழிந்தனர்.
தொடர்ந்து, மக்களவைத் தலைவரை தேர்ந்தெடுக்க குரல் வாக்கெடுப்பை மக்களவை இடைக்காலத் தலைவர் நடத்தினார். இதில், மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுவரை மக்களவையில் அவைத் தலைவர் ஒருமனதாகவே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.