எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி -

மக்களின் குரலாக எதிர்க்கட்சிகள்: ராகுல் காந்தியின் முதல் உரை!

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியின் முதல் உரை.
Published on

மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி அவையில் முதல்முறையாக இன்று பேசியுள்ளார்.

18-வது மக்களவைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்பி ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றினார்.

அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

”தேர்தலில் வெற்றி பெற்று மக்களவைத் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களுக்கு அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

இந்த அவை நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கிறது. நீங்கள்தான் அந்த குரல்களின் இறுதி நடுவர். அரசுக்கு அரசியல் அதிகாரம் உண்டு. ஆனால், எதிர்க்கட்சிகள் மக்களின் குரலாக ஒலிக்கும். கடந்த முறையைவிட தற்போது கூடுதல் பலத்துடன் ஒலிக்கும்.

உங்களின் கடமைகளை நீங்கள் செய்ய எதிர்க்கட்சிகள் உங்களுக்கு உதவ விரும்புகின்றன. இந்த அவை சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நம்பிக்கையின் அடிப்படையில் ஒத்துழைப்பது மிகவும் முக்கியம். இந்த அவையில் எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகவும் முக்கியம்.

இந்திய மக்களின் குரலான எங்களின் குரலுக்கு வாய்ப்பளிப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த அவை எவ்வளவு திறமையாக நடத்தப்படுகிறது என்பது கேள்வி அல்ல, மக்களுக்காக எந்தளவு ஒலிக்க அனுமதிக்கப்படுகிறது என்பதே கேள்வி.

எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கி அவையை திறமையாக நடத்தலாம் என்று எண்ணுவது ஜனநாயகத்துக்கு புறம்பானது. நாட்டின் அரசியல் சாசன சட்டத்தை காக்க எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன. இந்திய மக்களும் எதிர்பார்க்கிறார்கள் என்பதை தேர்தல் காட்டியுள்ளது.” எனத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
ஓம் பிர்லாவை இருக்கைக்கு அழைத்துச் சென்ற மோடி, ராகுல்!

நாட்டில் முதல்முறையாக நடைபெற்ற மக்களவைத் தலைவருக்கான தேர்தலில் பாஜக எம்பி ஓம் பிர்லா வெற்றி பெற்றார். இதுநாள் வரை ஒருமனதாகவே மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், மக்களவைத் துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகள் கேட்ட நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தர மறுக்க, மக்களவைத் தலைவர் பதவிக்கு இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷ் நிறுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற மக்களவைத் தலைவர் பதவிக்கான குரல் வாக்கெடுப்பில் ஓம் பிர்லா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஓம் பிர்லாவை மோடியும், ராகுல் காந்தியும் ஒன்றுசேர அழைத்துச் சென்று மக்களவைத் தலைவருக்கான இருக்கையில் அமர வைத்தனர்.

தொடர்ந்து, ஓம் பிர்லாவை வாழ்த்தி மோடியும், ராகுல் காந்தியும் அவையில் உரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com