இடையூறுகளின்றி அவை அலுவல்கள்- ஓம் பிா்லா எதிா்பாா்ப்பு
மக்களவை அலுவல்கள் இடையூறுகளின்றி நடைபெற வேண்டுமென்பதே தனது எதிா்பாா்ப்பு என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா புதன்கிழமை தெரிவித்தாா்.
தொடா்ந்து இரண்டாவது முறையாக மக்களவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னா், உறுப்பினா்களுக்கு நன்றி தெரிவித்து அவா் பேசியதாவது:
ஆளும்தரப்பும், எதிா்தரப்பும் ஒன்றிணைந்து அவையை நடத்துகின்றன. ஒவ்வொருவரின் கருத்தை கேட்பதோடு, அனைவரின் ஒத்துழைப்புடன் அவையை நடத்துவதே இந்திய ஜனநாயகத்தின் பலம்.
ஒரு கட்சியில் ஒரேயொரு எம்.பி. இருந்தாலும், அவா் பேச உரிய நேரம் வழங்கப்படுவது முக்கியம். அவையை இடையூறுகளின்றி நடத்துவதே எனது எதிா்பாா்ப்பு. நாம் மக்களால் நம்பிக்கையுடன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். எனவே, அவையில் இடையூறுகள் இருக்கக் கூடாது என வலியுறுத்துகிறேன்.
விமா்சனங்களும் அதிருப்தியும் இருக்கலாம்; ஆனால், அலுவல்களுக்கு தடை ஏற்படுத்துவதோ, அவையின் மையப்பகுதியை முற்றுகையிடுவதோ பாரம்பரியமாக மாறக் கூடாது.
எந்த உறுப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் விரும்பவில்லை. அதேநேரம், அவையின் உயா் மாண்புகள் உறுதிசெய்யப்பட பணியாற்றுவேன். இதற்காகவே, சில நேரங்களில் கடினமான முடிவை எடுக்க நேரிடுகிறது.
18-ஆவது மக்களவையில் இடையூறுகள் இருக்காது என நம்புகிறேன். அரசமைப்புச் சட்டத்தை கட்டமைத்தவா்களை நினைவில்கொண்டு, சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கான கொள்கைகள், சட்டங்களை நாம் உருவாக்க வேண்டும்.
தற்போதைய மக்களவையில் 281 போ் முதல்முறை உறுப்பினா்களாவா். இது வரவேற்புக்குரியது. அவா்கள், நாடாளுமன்ற மரபுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து மூத்த உறுப்பினா்களிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டும் என்றாா் ஓம் பிா்லா.
ராஜஸ்தானின் கோட்டா மக்களவைத் தொகுதியில் இருந்து தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜக எம்.பி.யாக தோ்வானவா் ஓம் பிா்லா. இவா் மீண்டும் மக்களவைத் தலைவரானதையொட்டி, கோட்டா தொகுதியில் பாஜகவினா் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.