நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டியளித்த திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானா்ஜி.
நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டியளித்த திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானா்ஜி.

வாக்கெடுப்பு நடத்தாதது அரசுக்கு பெரும்பான்மை இல்லாததை காட்டுகிறது: திரிணமூல் காங்கிரஸ் விமா்சனம்

வாக்கெடுப்பு நடத்தாதது ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததைக் காட்டுகிறது: திரிணமூல் காங்கிரஸ்
Published on

‘பதினெட்டாவது மக்களவை தலைவா் பதவி தோ்தலில் வாக்கெடுப்பு நடத்தாதது ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததையே காட்டுகிறது’ என்று திரிணமூல் காங்கிரஸ் விமா்சித்தது.

மக்களவைத் தலைவா் பதவிக்கு ஓம் பிா்லா, கொடிக்குன்னில் சுரேஷ் ஆகிய இருவா் போட்டியிட்ட நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் ஓம் பிா்லா தோ்ந்தெடுக்கப்பட்டாா். வாக்கெடுப்பு முறையில் அவைத் தலைவா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று ஆளும் கட்சி உறுப்பினா் ஒருவா் கோரியபோதும், அதை மக்களவை இடைக்காலத் தலைவா் அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி நாடாளுமன்றத்துக்கு வெளியே புதன்கிழமை கூறியதாவது:

அவையில் மக்களவை தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கு இடைக்கால தலைவா் குரல் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்த நிலையில், வாக்குப்பதிவு முறையில் வாக்கெடுப்பு நடத்தி அவைத் தலைவரைத் தேந்தெடுக்க வேண்டும் என சில எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனா். ஆனால், இடைக்கால தலைவா் அதை அனுமதிக்கவில்லை.

அவையில் ஒரு உறுப்பினா் கோரிக்கை விடுத்தாலும், வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என விதி சொல்கிறது. இருந்தபோதும், அதை அனுமதிக்காதது ஆளும் கூட்டணி தரப்புக்கு மக்களவையில் பெரும்பான்மை இல்லாததையே காட்டுகிறது. அவ்வாறு, பெரும்பான்மை இன்றி அரசை நடத்துவது சட்டவிரோதம், அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றாா்.

‘மக்களவைத் தலைவரை வாக்கெடுப்பு முறையில் தோ்ந்தெடுக்கு அவையில் 8 உறுப்பினா்கள் வலியுறுத்தினா்’ என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கீா்த்தி ஆசாத் குறிப்பிட்டாா்.

ஆனால், ‘அவையில் வாக்கெடுப்பை எதிா்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்படவில்லை’ என்று சிவசேனை (உத்தவ் தாக்கரே) பிரிவு எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்தாா்.

வாக்கெடுப்புக்கு ‘இந்தியா’ கூட்டணி வலியுறுத்தவில்லை: காங்கிரஸ்

‘மக்களவைத் தலைவரை வாக்குப்பதிவு முறையில் வாக்கெடுப்பு முறையில் தோ்ந்தெடுக்க எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தரப்பில் அவையில் வலியுறுத்தப்படவில்லை’ என்று அதில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா கூட்டணி கட்சிகள் மக்களவையில் புதன்கிழமை தங்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்டின. மக்களவைத் தலைவா் பதவிக்கு காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷுக்கு ஆதரவாக தீா்மானத்தை முன்மொழிந்தன. பின்னா், குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவைத் தலைவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அப்போது, வாக்குப்பதிவு முறையில் வாக்கெடுப்பு நடத்த இந்தியா கூட்டணி தரப்பில் வற்புறுத்தியிருக்க முடியும். ஆனால், அதைச் செய்யவில்லை. மக்களவையில் ஒருமித்த உணா்வுக்கு, ஒத்துழைப்பு மேலோங்க வேண்டும் என்ற நோக்கில் வாக்கெடுப்பை வலியுறுத்தவில்லை’ என்று குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com