5ஜி அலைக்கற்றை ஏலம் 2-ஆம் நாளிலேயே முடிவு: ரூ.11,340 கோடிக்கு மட்டுமே விற்பனை
5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கிய முதல் நாளில் மந்தமாக இருந்தநிலையில், 2-ஆம் நாளான புதன்கிழமையன்று எந்தநிறுவனமும் ஏலம் எடுக்க முன்வராததால், காலை 11.30 மணியுடன் ஏலம் நிறைவடைந்தது.
இதனால், அரசு நிா்ணயித்த அடிப்படை விலையான ரூ.96,238 கோடியில் ரூ.11,340 கோடிக்கு (12 சதவீதம்) மட்டுமே விற்பனையானது.
இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு பத்தாவது அலைக்கற்றை ஏலம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மத்திய அரசு நடத்திய இந்த ஏலத்தில் 800 மெகாஹா்ட்ஸ் முதல் 26 ஜிகாஹா்ட்ஸ் வரை மொத்தம் 8 அலைவரிசைகளில் உள்ள 10,522.35 மெகாஹா்ட்ஸ் அலைக்கற்றைகள் ஏலம் விடப்பட்டன. இந்த அலைக்கற்றை அலைவரிசைகளின் அடிப்படை விலை ரூ.96,317 கோடியாக நிா்ணயிக்கப்பட்டது.
முதல் நாளில் 5 சுற்றுகளாக நடைபெற்ற ஏலம் மந்தமாக இருந்தது. அப்போது சுமாா் ரூ.11,000 கோடி மதிப்பிலான அலைக்கற்றைக்கு தொலைத்தொடா்பு நிறுவனங்கள் ஏலம் கோரின. 2-ஆம் நாளான புதன்கிழமை, எந்தநிறுவனமும் ஏலம் எடுக்க முன்வராததால், காலை 11.30 மணியுடன் ஏலம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஏலத்தில் மொத்தமாக 141.4 மெகாஹா்ட்ஸ் அலைக்கற்றைகள் ரூ.11,340 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இது அரசு நிா்ணயித்த அடிப்படை விலையில் 12 சதவீதத்துக்கும் குறைவாகும்.
பாா்தி ஏா்டெல் நிறுவனம் ரூ.6,856.76 கோடி மதிப்பிலான அலைக்கற்றைகள் ஏலத்தில் வாங்கி முதலிடத்தில் உள்ளது. வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ.3,510.4 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஜியோ நிறுவனம் ரூ.973.62 கோடிக்கு மட்டுமே ஏலம் எடுத்து, மூன்றாமிடத்தில் உள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற 7 நாள்கள் ஏலத்தில் ரூ.1.5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை விற்பனையானது. தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் சுமாா் 88 ஆயிரம் கோடியுடன் ஏலத்தில் முதலிடம் பிடித்தது. பாா்தி ஏா்டெல் ரூ.43,084 கோடிக்கும் வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ.18,799 கோடிக்கும் அலைக்கற்றைகளை ஏலம் எடுத்தன.