
ரயில் முன்பதிவுக்கான இ-டிக்கெட் முறையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை என்று வெளியான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.
ஒருவர், தனக்கு அல்லாமல், நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யக் கூடாது என்றும், அவ்வாறு செய்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் ஒரு சில நாள்களாக போலியான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்துள்ளது.
ஆனால், அது உண்மையில்லை என்றும், யார் வேண்டுமானாலும், ஒரு லாக்-இன் முகவரியில் சென்று, யாருக்கும் எந்தப் பெயரைக் கொண்டவர்களுக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
ஐஆர்சிடிசி-யில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், தன்னால், வேறு பெயர்களைக் கொண்ட பயணிகளுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை என்று எக்ஸ் வலைத்தளத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில், வேறு பயணிகளுக்கு டிக்கெட் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் போலியானது என்று ரயில்வே விளக்கம் கொடுத்துள்ளது.
அதாவது, இந்திய ரயில்வேயில், விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. நேரடியாக ரயில்நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களுக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அதில்லாமல் ஐஆர்சிடிசி இணையதளம், செயலி என பல வாய்ப்புகள் உள்ளன.
ஒருவர், ஐஆர்சிடிசி இணையதளத்தில் யூசர் ஐடி எனப்படும் பயனர் விவரத்தை வைத்திருந்தால், அவர் எவர் ஒருவருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்க முடியும். இந்த நடைமுறை தற்போதும் நீடிப்பதாகவும், புதிய கட்டுப்பாடுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
அதாவது, தன்னுடைய பயனர் விவரத்திலிருந்து ஒருவர் தனக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
ஒருவர் மாதத்துக்கு அதிகபட்சமாக 12 டிக்கெட் எடுக்கலாம், ஆதார் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பயனராக இருந்தால் 24 டிக்கெட்டுகளை எடுக்கலாம்.
ரயில்வே சட்டம் 1989ல், 143வது பிரிவின்படி, ஒரு தனிநபர் பயனர் விவரமானது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, வணிக ரீதியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று வரையறுகிறது என ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.