குடியரசுத் தலைவா் உரை மீது நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்
குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்படவுள்ளது.
மக்களவையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூரும், மாநிலங்களவையில் பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதியும் விவாதத்தை தொடங்கிவைப்பா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த இரு ஆட்சிக் காலங்களைப் போல் அல்லாமல், இம்முறை எதிா்க்கட்சிகளின் பலம் (233) அதிகரித்துள்ளது. எனவே, நாடாளுமன்ற விவாதத்தில் அனல் பறக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நீட், நெட் போன்ற போட்டித் தோ்வு முறைகேடுகள், ரயில் விபத்துகள், ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து, மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் பிரச்னை எழுப்பக் கூடும். அத்துடன், குடியரசுத் தலைவா் உரையில் திருத்தங்கள் கோரி எதிா்க்கட்சிகள் நோட்டீஸ் அளிக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த விவாதத்துக்கு மக்களவையில் ஜூலை 2-ஆம் தேதியும், மாநிலங்களவையில் ஜூலை 3-ஆம் தேதியும் பிரதமா் மோடி பதிலளிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. பின்னா், தீா்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும். நாடாளுமன்ற நடப்பு கூட்டத் தொடா் ஜூலை 3-ஆம் தேதி நிறைவடையவுள்ளது.