
அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், யாத்திரிகர்களின் முதல் குழு வெள்ளிக்கிழமை அதிகாலை காஷ்மீரிலிருந்து கொடியசைத்துத் தொடங்கவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை மாதங்களில் தெற்கு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் தனித்துவமான வடிவத்தில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.
அதன்படி, நிகழாண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் 29 தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி நிறைவடைகிறது. அமர்நாத் யாத்திரையில் இந்தாண்டும் லட்சக்கணக்கான சிவ பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் நாளை மறுநாள் தொடங்கவுள்ள அமர்நாத் யாத்திரைக்கு, யாத்திரிகர்களின் முதல் குழு ஏற்கனவே ஜம்முவில் உள்ள பகவதி நகர், யாத்ரி நிவாஸுக்கு வரத் தொடங்கியுள்ளனர். அங்கிருந்து வடக்கு காஷ்மீர் பால்தால் மற்றும் தெற்கு காஷ்மீர் அனந்த்நாக் அடிப்படை முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
பகவதி நகர் யாத்ரி நிவாஸின் முதல் குழு வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பள்ளத்தாக்கு வாகனத்தில் புறப்படும் என்றும், சனிக்கிழமை தரிசனம் செய்வார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
300 கி.மீ நீளமுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையைப் பாதுகாப்பதற்காக நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சிஏபிஎப் குழுக்கள் 85 கி.மீ, நீளமுள்ள ஸ்ரீநகர்-பால்டால் பேஸ் கேம்ப் சாலை மற்றும் காசிகுண்ட்-பஹ்ல்காம் பேஸ் கேம் சாலை ஆகியவற்றைக் காத்து வருகின்றனர்.
ஸ்ரீநகர்-பால்டால் வழித்தடத்தில் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள மணிகம், காசிகுண்ட்-பஹல்காம் வழித்தடத்தில் மீர் பஜாரில் யாத்திரிகர்களுக்கான போக்குவரத்து முகாம்களை அதிகாரிகள் அமைத்துள்ளனர்.
இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை மொத்தம் 3.50 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் குகைக் கோயிலுக்குச் செல்லும் இரண்டு வழிகளிலும் 125 சமூக சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சேவை செய்வார்கள்.
பஹல்காம் மற்றும் பால்டால் வழித்தடங்களில் பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் சேவைகளும் உள்ளன. இந்தாண்டு என்டிஆர்எப், எஸ்டிஆர்எப், உள்ளூர் காவல்துறையினர், பிஎஸ்எப் மற்றும் சிஆர்பிஎப் ஆகியவற்றிலிருந்து 38 மீட்புக் குழுக்கள் யாத்ராவிற்கு அனுப்பப்பட்டுள்ளன.