ஜிஎஸ்டியால் தொழில்துறை பயன்: குடியரசுத் தலைவர்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார்.
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், முதல் இரண்டு நாள்களில் எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். நேற்று மக்களவைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில், பாஜக எம்பி ஓம் பிர்லா மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று மாநிலங்களவைக் கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
குடியரசுத் தலைவர் பேசியதாவது:
“புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கும், மீண்டும் மக்களவைத் தலைவராக பதவியேற்றுள்ள ஓம் பிர்லாவுக்கும் வாழ்த்துகள்.
ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த மக்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். 60 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 3-வது முறையாக ஒரே அரசை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
மக்களின் இந்த முடிவு வளர்ச்சி அடைந்த இந்தியாவாக மாற்றுவதற்கான நம்பிக்கை. மக்களவைத் தேர்தல் உலகின் மிகப்பெரிய தேர்தலாக நடந்துள்ளது.
சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவற்றின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 11வது இடத்தில் இருந்து 5-வது பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது. இன்று உலக வளர்ச்சியில் இந்தியா 15% பங்களிப்பை வழங்குகிறது. இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாற்றும் நோக்கில் எனது அரசு செயல்பட்டு வருகிறது.
கரோனா, போர்ச் சூழல்களை கடந்து இந்தியா வேகமாக வளர்ந்து வருகின்றது. புதிய தொழில்நுட்பங்களால் நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது. உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது.
வரும் கூட்டத் தொடரில், இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட், அரசாங்கத்தின் தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் எதிர்கால நோக்கங்களை கொண்டதாக இருக்கும். புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளது.
விவசாயம், தொழில்துறை, சேவைத் துறைக்கு சமமான முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. விரைவில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும்.
சிறிய நகரங்களுக்குகூட விமான போக்குவரத்து வசதி கிடைத்துள்ளன. சாலைகள் உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
பல பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வு காணும் என்று உலக நாடுகள் நம்புகின்றன.
வடகிழக்கு மாநிலங்களுக்கான பட்ஜெட் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. வடகிழக்கில் அமைதி நிலவ பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மகளிருக்கான பல்வேறு சுயதொழில் திட்டங்கள் அதிகளவில் அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசின் திட்டங்களால் நாட்டின் பெண்களுக்கான பொருளாதாரம் அதிகரித்துள்ளது.
விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. இதுவரை 3.20 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய அரசு அமைந்தவுடன் ரூ. 20 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டது.
நாட்டில் உள்ள ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோர் அதிகாரம் பெற்றால்தான் வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும். எனவே அவர்களுக்கு நமது அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகள் ஏழ்மையில் இருந்து 25 கோடி மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 55 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் தொழில்துறை பயனடைந்துள்ளது. தமிழ்நாடு, உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்புத்துறைக்கான தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
தேர்வு முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
வருகின்ற 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா தயாராக உள்ளது.
ஜூலை மாதம் முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வரும். இனிமேல் தண்டனை அல்ல, சட்டங்கள் மூலம் நியாயம் கிடைக்கும். சுதந்திரத்துக்கு பிறகு செய்ய வேண்டியதை தற்போது அரசு செய்துள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்பு அவசரநிலை அறிவிக்கப்பட்ட நாள் ஒரு கருப்பு தினம். இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம். அவசர நிலை பிரகடனம் என்பது அரசியலமைப்பு மீதான தாக்குதல்.
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை தகர்க்கும் செயலில் ஈடுபடக் கூடாது. வதந்திகளை பரப்பக் கூடாது. தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை குலைக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.