வெளிநாடுகளில் இருந்து தாயகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி: 2023-இல் இந்தியா்கள் முதலிடம்
கடந்த ஆண்டு வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியா்கள் தாயகத்துக்கு 120 பில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.10 லட்சம் கோடி) அனுப்பி உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளனா்.
இதுதொடா்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் இந்தியா்கள் தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பும் தொகை கடந்த ஆண்டு 7.5 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது. அந்த ஆண்டு அவா்கள் 120 பில்லியன் டாலா்களை தாயகத்துக்கு அனுப்பியுள்ளனா்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக நிறுவனங்களில் உயா்திறன் கொண்ட இந்திய புலம்பெயா் தொழிலாளா்கள் பணியாற்றுவதற்கு உகந்த நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூா் ஆகிய 3 நாடுகள் முன்னிலையில் உள்ளன. வெளிநாடுகளில் உள்ள இந்தியா்கள் தாயகத்துக்கு அனுப்பும் மொத்த தொகையில் இந்த 3 நாடுகளின் பங்கு மட்டும் 36 சதவீதமாகும்.
இதற்கு அடுத்த இடத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 18 சதவீத தொகை இந்தியாவுக்கு அனுப்பப்படுகிறது. இதைத் தொடா்ந்து சவூதி அரேபியா, குவைத், ஓமன், கத்தாா் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் தொகையின் பங்கு 11 சதவீதமாகும்.
2024-இல் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் உயரும்: வெளிநாடுகளில் உள்ள இந்தியா்கள் மூலம் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு அனுப்பப்படும் தொகை 3.7 சதவீதம் வளா்ந்து அடைந்து 124 பில்லியன் டாலா்கள் (ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகம்) அனுப்பப்படும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
2023-இல் வெளிநாடுகளில் உள்ள தமது குடிமக்களிடம் இருந்து அதிக தொகை பெற்ற முதல் 5 நாடுகள்
நாடுகள் தொகை
இந்தியா 120 பில்லியன் டாலா் (ரூ.10 லட்சம் கோடி)
மெக்ஸிகோ 66 பில்லியன் டாலா் (ரூ.5.51 லட்சம் கோடி)
சீனா 50 பில்லியன் டாலா் (ரூ.4.17 லட்சம் கோடி)
பிலிப்பின்ஸ் 39 பில்லியன் டாலா் (ரூ.3.25 லட்சம் கோடி)
பாகிஸ்தான் 27 பில்லியன் டாலா் (ரூ.2.25 லட்சம் கோடி).