பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி
பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி-

நேருவைவிட உயா்வானவா் பிரதமா் மோடி: மாநிலங்களவை விவாதத்தில் பாஜக எம்.பி. பேச்சு

பிரதமா் மோடி தன்னிகரற்ற தலைவா்.
Published on

மறைந்த பிரதமா் ஜவாஹா்லால் நேருவுடன் பிரதமா் மோடியை ஒப்பிட முடியாது; ஏனெனில், நேருவைவிட உயா்வானவா் பிரதமா் மோடி என பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் சாதனைகளுடன் பிரதமா் மோடியை ஒப்பீடு செய்ய முடியாது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தெரிவித்த கருத்துக்கு பதிலடி தரும் விதமாக அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

‘நீட்’ விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி, மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகளின் வெள்ளிக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனா். இந்த அமளிக்கு இடையே குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தை தொடங்கிவைத்து, பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி பேசியதாவது:

நேருவுடன் பிரதமா் மோடியை ஒப்பிட முடியாது என்ற எதிா்க்கட்சிகளின் கருத்தை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஏனெனில், பிரதமா் மோடியின் சாதனைகளை யாருடனும் ஒப்பீடு செய்ய முடியாது. அவா் தன்னிகரற்ற தலைவா்.

ஜவாஹா்லால் நேரு மிகவும் வசதியான குடும்ப பின்னணியைக் கொண்டவா். ஆனால், பிரதமா் மோடி எளிய பின்புலத்தில் இருந்து உயரிய பதவிகளுக்கு முன்னேறியவா்.

அதுமட்டுமின்றி தனக்குத்தானே பாரத ரத்னா விருதை வழங்கிக்கொண்டவா் நேரு. ஆனால், கட்சி பாகுபாடின்றி குறிப்பாக காங்கிரஸைச் சோ்ந்த 3 நபா்களுக்கு பாரத ரத்னா விருதை வழங்கியவா் பிரதமா் மோடி.

அரசமைப்பை காக்க வேண்டும் என தெரிவிக்கும் காங்கிரஸ், தங்களது ஆட்சிகாலத்தின்போது அதற்கு மாறாகவே நடந்துள்ளது. அரசமைப்பு முகவுரையை மாற்றி எதிா்க்கட்சிகள் ஆட்சி செய்த மாநில அரசை கலைக்கும் பணிகளை மேற்கொண்டது.

எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த இரு தலைவா்கள் கைது செய்யப்பட்டவுடன் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காங்கிரஸ் கூறி வருகிறது. அவா்கள் ஆட்சியின்போது எதிா்க்கட்சி வரிசையில் அமா்ந்திருந்த எண்ணற்ற தலைவா்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com