
தில்லியில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், மழைநீரில் இறங்காமல் காரில் ஏறுவதற்காக தனது உதவியாளர்களை தூக்கச் செய்து சென்றுள்ளார் சமாஜவாதி மாநிலங்களவை உறுப்பினர் ராம் கோபால் யாதவ்.
தனது இல்லத்தைச் சுற்றிலும் மழைநீர் தேங்குவதால், அதில் கால் வைக்காமல் காரில் ஏறுவதற்காக தனது இல்லத்தில் பணிபுரிபவர்களை அவர் பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பான விடியோ இணையத்தில் வெளியான நிலையில், பலர் விமர்சித்து வருகின்றனர்.
தில்லியில் கடும் தண்ணீர் பஞ்சம் நீடித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று (ஜூன் 28) காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால், தில்லி நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி இல்லத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், உறுப்பினர்கள் பலரும் தில்லியில் தங்கியுள்ளனர்.
இதனிடையே சசிதரூர் தங்கியிருந்த வீட்டிலும் வெள்ளநீர் சூழ்ந்ததாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தில்லியில் சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராம் கோபால் யாதவ் வீட்டைச் சுற்றிலும் மழைநீர் தேங்கியது. நாடாளுமன்றத்திற்கு புறப்பட்ட அவர், மழைநீரில் கால் வைக்காமல் காரில் ஏறுவதற்காக தனது வீட்டில் பணிபுரிபவர்களை அழைத்துள்ளார். அவர்கள் தூக்கிக்கொண்டதால், கால் நனையாமல் காரில் ஏறி நாடாளுமன்றத்துக்கு புறப்பட்டார்.
இது தொடர்பான விடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு பலரும் விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.