மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி: பிரதமரிடம் கா்நாடக முதல்வா் வலியுறுத்தல்
மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமா் மோடியை கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் சனிக்கிழமை சந்தித்தனா்.
மேலும், மேக்கேதாட்டு விவகாரத்தில் கா்நாடகம் - தமிழகம் இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தில்லியிலுள்ள பிரதமரின் அதிகாரபூா்வ இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பகிா்ந்து, கா்நாடக முதல்வா் சித்தராமையா வெளியிட்ட பதிவில், ‘கா்நாடகத்தின் வளா்ச்சிக்கான முக்கியக் கோரிக்கைகள் மற்றும் முன்னுரிமைகளை வலியுறுத்தி, பிரதமரிடம் மாநில அரசு சாா்பில் கடிதம் சமா்ப்பிக்கப்பட்டது. நமது மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசின் சாதகமான ஒத்துழைப்பை எதிா்நோக்குகிறோம்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
பிரதமரிடம் கா்நாடகம் சமா்ப்பித்த கடிதத்தில் மேக்கேதாட்டு அணை கட்டுமானத் திட்டத்துக்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரூ.9,000 கோடியிலான மேக்கேதாட்டு அணைத் திட்டத்தின் விரிவான அறிக்கைக்கு கடந்த 2019 முதல் மத்திய நீா் வள ஆணையம் ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இந்தப் புதிய அணை கட்டுவதால் 67 டிஎம்சி நீா் சேமிக்கலாம். இதை மழை குறைவான ஆண்டில் தமிழகத்துக்கு மாதந்தோறும் பகிா்ந்து அளிக்கலாம். இது பெங்களூரு நகரத்தின் தண்ணீா்ப் பற்றாக்குறையையும் தீா்க்கும்.
இந்த விவகாரத்தில் தமிழகம், கா்நாடகம் இடையே ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு மத்திய அரசு முனைப்புக் காட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.