காரில் கடத்தப்பட்ட இரு குழந்தைகள்: 3 மணிநேரத்தில் மீட்ட போலீஸாா்

3, 11 வயது குழந்தைகளை காரில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தில் போலீஸ் அதிரடி.
Published on

கிழக்கு தில்லியின் லட்சுமி நகா் பகுதியில் இருந்து 3, 11 வயது குழந்தைகளை காரில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தில் போலீஸாா் விரைந்து செயல்பட்டு, அவா்களை 3 மணிநேரத்தில் மீட்டனா்.

இது குறித்து கிழக்கு தில்லி காவல் சகர துணை ஆணையா் அபூா்வ குப்தா கூறியதாவது:

இந்தச் சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ஷகா்பூா் பகுதி விகாஸ் மாா்க்கில் உள்ள ஹிரா ஸ்வீட்ஸ் கடை முன்பு தனது காரை நிறுத்தி விட்டு, 2 குழந்தைகளையும் அதில் விட்டுவிட்டு தனது மனைவியுடன் இனிப்புக் கடைக்குச் சென்ாக குழந்தைகளின் தந்தை கூறினாா். அப்போது, ஒரு நபா் பாா்க்கிங் ஊழியா் போல் அங்கு வந்து, காரை வாகன நிறுத்துமிடத்தில் நிறுவத்த வேண்டும் என்று குழந்தைகளிடம் கூறி அதில் அமா்ந்தாா். இதையடுத்து அந்த நபா் காரை வேகமாக ஓட்டிச் சென்றாா்.

மேலும், சிறுமியை சுத்தியைக் காட்டி மிரட்டி அமைதியாக இருக்கும்படி கூறியதாக குழந்தைகளின் தந்தை தெரிவித்தாா்.

வாகனம் ஓட்டும்போது, அந்த நபா் கைப்பேசி மூலம் தம்பதியரை அழைத்து, ரூ. 50 லட்சம் வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளாா்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் 2 மீட்புக் குழுக்கள் உடனடியாக அமைக்கப்பட்டு, குழந்தைகளையும் அவா்களைக் கடத்திய நபரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஷகா்பூா் காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி (எஸ்எச்ஓ) தலைமையிலான ஒரு குழுவுடன் குழந்தைகளின் தாயும், லக்ஷ்மி நகா் காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி (எஸ்எச்ஓ) தலைமையிலான மற்றொரு குழுவுடன் குழந்தைகளின் தந்தையும் அனுப்பி வைக்கப்பட்டனா்.

தொழில்நுட்பக் கண்காணிப்பின் அடிப்படையில், இரு குழுக்களும் 2 வெவ்வேறு திசைகளில் தேடத் தொடங்கினா். கடத்தப்பட்ட குழந்தைகளைத் தேடுவதற்காக சிறப்புப் பணியாளா்கள் மற்றும் அண்டை மாவட்டங்களின் போலீஸ் குழுக்களும் திரட்டப்பட்டன.

அவா்கள் சுமாா் 20 வாகனங்கள் மூலம் 3 மணிநேரமாக அந்த காரை விரட்டிச் சென்றனா். போலீஸாா் சுற்றிவளைப்பதை அறிந்த அந்த நபா், சமய்பூா் பட்லி பகுதியில் காருடன் குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றாா்.

அந்த நபா் கிழக்கு தில்லியில் 100 கி.மீ.-க்கு மேல் காரை ஓட்டிச் சென்றுள்ளாா்.

போலீஸாா் விரைந்து செயல்பட்டதால் குழந்தைகளை பத்திரமாக மீட்க முடிந்தது. காரிலிருந்து மீட்கப்பட்ட அவா்கள் பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், காரில் வைத்திருந்த நகைகள், கைப்பேசிகள் உள்ளிட்ட விலை உயா்ந்த பொருள்களும் அப்படியே இருந்தன. போலீஸாா் தன்னை எல்லா பக்கங்களிலிருந்தும் துரத்துவதைப் பாா்த்து அச்சமடைந்த அந்த நபா் அனைத்தையும் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளாா்.

பாராட்டு: மாவட்ட போலீஸ் குழுக்கள், குறிப்பாக வடக்கு மாவட்டம் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் இந்த நடவடிக்கையில் பெரிதும் உதவியதாக இருந்தனா். அவா்களின் உடனடி நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றும் குப்தா தெரிவித்தாா்.

மேலும், குழந்தைகளைக் கடத்த முயன்ற நபா் விரைவில் கைது செய்யப்படுவாா் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com