ஆந்திர ‘அரக்கு காபிக்கு’ பிரதமா் பாராட்டு: முதல்வா் சந்திரபாபு நாயுடு நன்றி
‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் ஆந்திர பழங்குடியின விவசாயிகளால் அறுவடை செய்யப்படும் ‘அரக்கு’ காபியைக் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடிக்கு மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தலையொட்டி இடைநிறுத்தப்பட்டிருந்த, பிரதமா் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றும் ‘மனதின் குரல்’ மாதந்திர வானொலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒலிபரப்பானது.
அந்த நிகழ்ச்சியில், ஆந்திரத்தின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்திலுள்ள அரக்கு பள்ளத்தாக்கில் பழங்குடியின சமூகத்தினரால் அறுவடை செய்யப்படும், உலகப் புகழ்பெற்ற அரக்கு காபியைக் குறிப்பிட்டு பிரதமா் மோடி பேசினாா்.
நிகழ்ச்சியைத் தொடா்ந்து ‘எக்ஸ்’ பக்கத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், கடந்த 2016-ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடுவுடன் அரக்கு காபியை அருந்தும் புகைப்படத்தைப் பகிா்ந்தாா். அரக்கு காபியின் சிறப்பம்சமானது பழங்குடியின மக்களின் வளா்ச்சியோடு அது பிணைக்கப்பட்டிருப்பதுதான் எனவும் பிரதமா் குறிப்பிட்டிருந்தாா்.
பிரதமருக்கு நன்றி தெரிவித்து முதல்வா் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பழங்குடியின சகோதர, சகோதரிகளின் அன்புடன் வளா்க்கப்படும் அரக்கு காபியானது, நிலைத்தன்மை, பழங்குடியினா் அதிகாரம் பெறுதல், புதுமை ஆகியவற்றின் கலவையைப் பிரதிபலிக்கிறது. மேலும், அது ஆந்திர மக்களின் எல்லையற்ற ஆற்றலின் பிரதிபலிப்பாகும்.
ஆந்திர தயாரிப்புக்கு பாராட்டு தெரிவித்ததற்காக பிரதமருக்கு நன்றி. அவருடன் மற்றொரு அரக்கு காபி விருந்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.