
"நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் அனைத்துத் தரப்பினருடனும் மத்திய அரசு தொடர்பில் உள்ளது; மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்" என்று மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தெரிவித்தார்.
இது தொடர்பாக பிகார் தலைநகர் பாட்னாவில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக உரிய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த விவகாரம் நீதிமன்றத்தின் முன் விசாரணையில் உள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துத் தரப்பினருடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.
நீட் விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது குறித்துக் கேட்கிறீர்கள். எதிர்க்கட்சிகள் தவறான மனப்போக்கைக் காட்டுகின்றன. மக்கள் தொடர்புடைய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் விரும்பினால் நாடாளுமன்ற அவைகள் முறைப்படி நடக்க அவை அனுமதிக்க வேண்டும்; மேலும் விவாதங்களில் பங்கேற்க வேண்டும்.
பிகாரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் முதல்வருமான நிதீஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும்.
பிகாரில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றங்களின் எண்ணிக்கை, மாநிலத்தில் சட்டம்}ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த நிலை கவலை தருவதாக இருந்தபோதிலும் மாநில அரசு இதைச் சமாளிக்கும் திறன் வாய்ந்ததாகும்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசியல் சாசனத்தை ரத்து செய்துவிடும் என்றும், இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட தவறான பிரசாரத்தை அண்டை மாநிலமான உத்தர பிரதேச மக்கள் நம்பியது போல் பிகார் மக்கள் நம்பவில்லை என்பது மகிழ்ச்சி தருகிறது.
எனது தந்தை ராம்விலாஸ் பாஸ்வான் உருவாக்கிய லோக் ஜனசக்தி கட்சியின் தொடக்க விழாவையொட்டி பாட்னாவில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க காந்தி மைதானத்தில் எங்கள் கட்சி சார்பில் பேரணி நடத்தப்படும் என்றார்.
மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் சிராக் பாஸ்வான், பிகார் மாநிலத்துக்கு வந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.