போக்குவரத்து விதிமீறல்: ஜூன் 15 வரை 2,500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு; கடந்த ஆண்டைவிட 250% அதிகம்
தேசிய தலைநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக இந்த ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி வரை 2,500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 250 சதவீதம் அதிகமாகும். இதில் அதிகபட்சமாக ஐஜிஐ விமான நிலைய வட்டத்தில் 572 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இது குறித்து தில்லி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தேசிய தலைநகரில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகன ஓட்டிகள் முறையான பாதையில் செல்வதை உறுதிசெய்யவும் கடுமையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தில்லி போக்குவரத்து துறை நகரம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, போக்குவரத்து இயக்கத்தைக் கண்காணிக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தில்லியில் இந்த ஆண்டு தவறான பாதையில் வந்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. அதன்படி, ஜூன் 15-ஆம் தேதி வரை தவறான பாதையில் வாகனங்களை ஓட்டியதற்காக 2,577 விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2023-ஆம் ஆண்டில் 732-ஆக இருந்தது. அதன்படி, கடந்த ஆண்டைவிட 252 சதவீதம் அதிகமாகும்.
மேலும், அதிக எண்ணிக்கையிலான சலான்கள் வழங்கப்பட்ட முதல் 10 போக்குவரத்து வட்டங்கள் குறித்து தில்லி போக்குவரத்துத் துறை ஆய்வு செய்து வருகிறது.
குறிப்பாக, ஐஜிஐ விமான நிலைய வட்டத்தில் அதிகபட்சமாக 572, மயூா் விஹாா் வட்டத்தில் 344, மது விஹாா் வட்டத்தில் 339, கம்லா மாா்க்கெட்டில் 215, சிவில் லைன்ஸில் 195, நரேலாவில் 194, கோட்வாலியில் 178, திமா்பூரில் 164, கபஷேராவில் 86, கல்யாணூரியில் 59 வழக்குகள் பதிவு செய்யப்படட்டுள்ளது.
நகரில் அடிக்கடி போக்குவரத்து விதிமீறல்கள் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து பகுபாய்வு செய்யப்படும். தில்லி மக்களின் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் இந்த ஆய்வு உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.