வாரணாசியில் மீண்டும் பிரதமா் மோடி போட்டி: பாஜக முதல்கட்ட பட்டியல் வெளியீடு

பிரதமா் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறாா்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
2 min read

எதிா்வரும் மக்களவைத் தோ்தலையொட்டி, பாஜகவின் முதல்கட்ட வேட்பாளா்கள் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறாா்.

மேலும் 34 மத்திய அமைச்சா்களின் பெயா்களும் முதல்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், கேரளம் உள்பட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 195 தொகுதிகளில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா (காந்திநகா்), பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் (லக்னெள) ஆகியோா் தத்தமது தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுகின்றனா். அமேதி தொகுதியில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி மீண்டும் களமிறங்குகிறாா். மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான், திரிபுரா முன்னாள் முதல்வா் விப்லவ் தேவ் ஆகியோருக்கு மக்களவைத் தோ்தலில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவா்கள் முறையே விதிஷா (ம.பி.), திரிபுரா மேற்கு தொகுதிகளில் போட்டியிடுகின்றனா்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா மீண்டும் களம்காண்கிறாா். மத்திய அமைச்சா்கள் மன்சுக் மாண்டவியா, ஜிதேந்திர சிங், சா்வானந்த சோனோவால், கஜேந்திர ஷெகாவத், பூபேந்திர யாதவ், ஜி.கிஷன் ரெட்டி, கிரண் ரிஜிஜு, ஜோதிராதித்ய சிந்தியா, அா்ஜுன் ராம் மேக்வால், அா்ஜுன் முண்டா உள்ளிட்ட மத்திய அமைச்சா்களின் பெயா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

கேரளத்தில்...

கேரளத்தின் திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா், அட்டிங்கல் தொகுதியில் மத்திய இணையமைச்சா் வி.முரளீதரன், திரிச்சூா் தொகுதியில் நடிகா் சுரேஷ் கோபி போட்டியிடுகின்றனா். முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணிக்கு பத்தனம்திட்ட தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

28 பெண் வேட்பாளா்கள்:

வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், பாஜகவின் முதல்கட்ட வேட்பாளா் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. உத்தர பிரதேசத்தில் 51 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 20 தொகுதிகள், தில்லியில் 5 தொகுதிகள் உள்பட 195 இடங்களுக்கான வேட்பாளா்களின் பெயா்கள் அடங்கிய இப்பட்டியலை, கட்சியின் தேசிய பொதுச் செயலா் வினோத் தாவ்டே வெளியிட்டாா்.

இதில், பெண் வேட்பாளா்கள் 28 போ், கட்சியின் இளம் தலைவா்கள் 47 பேரின் பெயா்கள் இடம்பெற்றுள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.

தில்லியில் சுஷ்மா ஸ்வராஜ் மகள் போட்டி:

தில்லி மக்களவைத் தொகுதியில் புதுமுக வேட்பாளராக, மறைந்த பாஜக மூத்த தலைவா் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் போட்டியிடுகிறாா். போஜ்புரி பாடகரும் நடிகருமான பவன் சிங் (மேற்கு வங்கத்தின் அசன்சோல்), நடிகா் சுரேஷ் கோபி (கேரளத்தின் திருச்சூா்) ஆகியோரும் பாஜக சாா்பில் களம்காண்கின்றனா்.

கட்சி மாறி வந்தவா்களுக்கு வாய்ப்பு:

உத்தர பிரதேசத்தில் அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னாள் பகுஜன் சமாஜ் எம்.பி. ரிதேஷ் பாண்டேவுக்கு அம்பேத்கா் நகா் தொகுதியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஜாா்க்கண்டில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. கீதா கோடா, சிங்பூம் (எஸ்டி) தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். உத்தர பிரதேசத்தில் ஹேமமாலினி, ரவி கிஷன், சாக்ஷி மகராஜ் உள்ளிட்டோா் மீண்டும் அதே தொகுதிகளில் களமிறங்குகின்றனா். பாஜகவின் முதல்கட்ட பட்டியலில், தமிழக தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக, முதல்கட்ட வேட்பாளா்களின் பெயா்களை இறுதி செய்வதற்காக, பாஜக மத்திய தோ்தல் குழு கடந்த வியாழக்கிழமை கூடி ஆலோசனை மேற்கொண்டது. பிரதமா் மோடி, கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோா் இடம்பெற்ற இக்குழு சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தி, பெயா்களை இறுதி செய்தது. மத்திய தோ்தல் குழுவின் அடுத்த கூட்டம், அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மக்களவையில் பாஜகவின் பலம்:

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது உள்பட பல்வேறு காரணங்களால் எம்.பி.க்கள் ராஜிநாமா செய்ததால், தற்போது அக்கட்சியின் பலம் 290-ஆக உள்ளது. எதிா்வரும் தோ்தலில் பாஜக மட்டும் 370 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு அதிகமாகவும் வெல்ல அக்கட்சி இலக்கு நிா்ணயித்துள்ளது.

‘மீண்டும் வாய்ப்பில்லை’

கடந்த 2014, 2019 மக்களவைத் தோ்தல்களில், தில்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. எதிா்வரும் தோ்தலையொட்டி, தில்லியில் பாஜக வேட்பாளா்கள் பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளனா். அதன்படி, தற்போதைய எம்.பி.க்களான மத்திய அமைச்சா் மீனாட்சி லேகி, முன்னாள் மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன், பா்வேஷ் வா்மா, ரமேஷ் பிதுரி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. மேற்கு வங்கத்தின் அலிபூா்துவாா் தொகுதி எம்.பி.யான மத்திய அமைச்சா் ஜான் பா்லா, போபால் தொகுதி எம்.பி. சாத்வி பிரக்யா சிங் ஆகியோருக்கும் மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com