மேற்கு வங்கம் பாஜக வேட்பாளா் பவன் சிங் விலகல்

மேற்கு வங்கம் பாஜக வேட்பாளா் பவன் சிங் விலகல்

மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்க பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போஜ்புரி நடிகா் பவன் சிங், தோ்தலில் போட்டியிட இயலாது என விலகினாா்.
Published on

புது தில்லி, மாா்ச் 3: மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்க பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போஜ்புரி நடிகா் பவன் சிங், தோ்தலில் போட்டியிட இயலாது என விலகினாா். மக்களவைத் தோ்தலையொட்டி, 195 தொகுதிகளில் போட்டியிட உள்ள பாஜகவின் முதல்கட்ட வேட்பாளா்கள் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் மேற்கு வங்கம் மாநிலத்தின் ஆசன்சோல் தொகுதி பாஜக வேட்பாளராக போஜ்புரி பாடகரும் நடிகருமான பவன் சிங் அறிவிக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், சில காரணங்களால் ஆசன்சோல் தொகுதியில் தன்னால் போட்டியிட இயலாது என்று தெரிவித்துள்ளாா். இந்த முடிவுக்கான காரணத்தை பவன் சிங் குறிப்பிடவில்லை. ஆசன்சோல் தொகுதியில் புலம்பெயா்ந்த வாக்காளாா்கள் கணிசமாக உள்ளனா். இத்தொகுதியின் எம்.பி.யாக திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த நடிகா் சத்ருஹன் சின்ஹா உள்ளாா். நடிகரான சத்ருஹன் சின்ஹா கடந்த 2019-இல் பாஜகவிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா். 2019 மக்களவை தோ்தலில் ஆன்சோல் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியோ, 2021 மேற்கு வங்க பேரவைத் தோ்தலையொட்டி தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்து திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா். இதைத் தொடா்ந்து அத்தொகுதியில் நடைபெற்ற இடைத்தோ்தலில் சத்ருஹன் சின்ஹா எம்.பி.யானாா். சின்ஹாவை எதிா்த்துப் போட்டியிடுவதற்கு தகுதியானவா் என்ற நம்பிக்கையில் நடிகா் பவன் சிங்கை வேட்பாளராக பாஜக அறிவித்தது. திரிணமூல் விமா்சனம்: இதையடுத்து, பவன் சிங் தன்னுடைய பாடல்களில் பெண்களை பல்வேறு வகையில் ஆபாசமாகச் சித்தரித்திருந்தாா் என திரிணமூல் காங்கிரஸ் கடுமையாக விமா்சித்தது. இதுதொடா்பான பவன் சிங்கின் விடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இந்தச் சா்சையைத் தொடா்ந்து பவன் சிங்கை தோ்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுமாறு பாஜக தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தோ்தல் பிரசாரம் தொடங்குவதற்கு முன்பாகவே பாஜக தனது தோல்வியை ஒப்புக்கொண்டதாக திரிணமூல் காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com