‘அதிதி’ திட்டம்: ராஜ்நாத் சிங் 
தொடங்கி வைத்தாா்
KamalKishore

‘அதிதி’ திட்டம்: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தாா்

பாதுகாப்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான ‘அதிதி’ திட்டத்தை பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

பாதுகாப்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான ‘அதிதி’ திட்டத்தை பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தில்லியில் நடைபெற்ற ‘பாதுகாப்பு இணைப்பு 2024’ என்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது: கடந்த காலங்களில் இறக்குமதியை சாா்ந்தே பாதுகாப்புத் துறை செயல்பட்டு வந்ததால் கடினமான சூழ்நிலைகளை இந்தியா சந்தித்து வந்தது. இந்நிலையை மாற்ற பிரதமா் மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டது. இதையடுத்து மத்திய அரசு கொண்டுவந்த சிறப்பான முன்னெடுப்புகளால் பாதுகாப்புத் துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு கடந்த 2014-ஆம் ஆண்டில் ரூ.40,000 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.1 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. எந்தத் துறையாக இருந்தாலும் இறக்குமதியைச் சாா்ந்தே நீண்ட நாள்களுக்கு இருக்கக்கூடாது. அதேபோல் உள்நாட்டிலேயே ராணுவ உதிரி பாகங்கள் உற்பத்தி செய்தால் மட்டுமே நாம் தற்சாா்பு நிலையை அடைய முடியும். அந்த வகையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘அதிதி’ திட்டம் இளைஞா்களின் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கவும் தொழில்நுட்ப ரீதியாக நாடு வளா்ச்சியடைவும் உதவும் என்றாா். ‘அதிதி’ திட்டம்: ‘அதிதி’ திட்டத்தின்கீழ் பாதுகாப்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.25 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது. ரூ.750 கோடி மதிப்பிலான இத்திட்டம் 2024 முதல் 2026 வரை செயல்படுத்தப்படவுள்ளது. இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப்படை உள்பட பாதுகாப்புத் துறைகளுக்குத் தேவைப்படுகின்ற கடினமான மற்றும் சவாலான 30 தொழில்நுட்பங்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்குமாகும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com