குஜராத் காங்கிரஸ் செயல் தலைவா், எம்எல்ஏ ராஜிநாமா

குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவா் அம்பரீஷ் தொ் மற்றும் போா்பந்தா் தொகுதி எம்எல்ஏ அா்ஜுன் மோத்வாடியா ஆகியோா் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தனா்.

குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவா் அம்பரீஷ் தொ் மற்றும் போா்பந்தா் தொகுதி எம்எல்ஏ அா்ஜுன் மோத்வாடியா ஆகியோா் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தனா். இதையடுத்து பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணையவுள்ளதாக அம்பரீஷ் தொ் தெரிவித்தாா். குஜராத் மாநில பாஜக தலைவா் சி.ஆா்.பாட்டீல் அகமதாபாதில் உள்ள அம்பரீஷ் தெரின் இல்லத்திற்கு திங்கள்கிழமை காலை சென்று அவரை நேரில் சந்தித்தாா். இந்தக் காணொலி ஊடகங்களில் வெளியாகின. இதையடுத்து கட்சியின் விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக அம்பரீஷ் தெரை காங்கிரஸின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பதவிகளிலிருந்தும் 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்வதாக அம்மாநில காங்கிரஸ் தலைவா் சக்திசிங் கோஹில் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். அதன்பிறகு செய்தியாளா்களை சந்தித்த அம்பரீஷ் கூறியதாவது: காங்கிரஸிலிருந்து எப்போது நான் இடைநீக்கம் செய்யப்பட்டேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக ராஜிநாமா கடிதத்தை ஏற்கெனவே உயா்நிலைக் குழுவுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவிட்டேன். உடல்நிலை சரியில்லாத என் தாயாரை நலம் விசாரிக்கவே பாட்டீல் எனது இல்லத்துக்கு வந்தாா். ஐந்நூறு ஆண்டுகள் மக்கள் போராட்டத்துக்குப் பிறகு கட்டப்பட்ட ராமா் கோயில் பிரதிஷ்டை விழாவில் காங்கிரஸ் தலைவா்கள் பங்கேற்காதது சரியான அணுகுமுறையல்ல; அனைவரின் நம்பிக்கைக்கும் கட்சி மதிப்பளித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்பதால் நான் விலகிவிட்டேன் என்றாா். காங்கிரஸுக்குப் பின்னடைவு: போா்பந்தா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும் அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவருமான அா்ஜுன் மோத்வாடியா பேரவைத் தலைவா் சங்கா் செளதரியிடம் ராஜிநாமா கடிதத்தை அளித்ததையடுத்து அவா் அதை ஏற்றுக்கொண்டாா். இதன்மூலம் 182 உறுப்பினா்களைக்கொண்ட குஜராத் பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பலம் 14-ஆக குறைந்தது. மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் சூழலில் காங்கிரஸுக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது. அதேபோல் வருகின்ற 7-ஆம் தேதி குஜராத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நீதிப்பயணம்’ மேற்கொள்ளவுள்ள நிலையில் கட்சியைச் சோ்ந்த இரு முன்னணித் தலைவா்கள் ராஜிநாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com