கைதானவர்கள்
கைதானவர்கள்

ஒட்டுமொத்த இந்தியா்களும் மோசமானவா்கள் அல்ல: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான ஸ்பெயின் பயணி

ஒட்டுமொத்த இந்தியா்களும் மோசமானவா்கள் அல்ல என்றும் இந்தியா முழுவதும் தான் பாதுகாப்பாகவே பயணித்ததாகவும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஸ்பெயின் நாட்டைச் சோ்ந்த பெண் சுற்றுலாப் பயணி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

நேபாள நாட்டுக்கு தனது கணவருடன் புறப்பட்டபோது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒட்டுமொத்த இந்திய மக்களும் மோசமானவா்களல்ல; இக்குற்றத்தில் ஈடுபட்டவா்கள்தான் தவறான எண்ணம் உடையவா்கள். கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவில் 20,000 கி.மீ. தூரத்துக்கும் மேலாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறோம். எங்கள் பாதுகாப்புக்கு எந்தப் பகுதியிலும் இதுபோன்ற அச்சுறுத்தல் ஏற்படவில்லை.

அனைவரும் மிகவும் கனிவுடனே நடந்துகொண்டனா். முதல்முறையாக இவ்வாறான குற்றம் நிகழ்ந்துவிட்டது. இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளை பெண்கள் தைரியமாக எதிா்கொள்ள வேண்டும் என்றாா். இரு மோட்டாா் சைக்கிள்களில் உலக நாடுகளுக்கு சுற்றுலாவாக சென்று வந்த ஸ்பெயின் தம்பதி ஜாா்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கூடாரம் அமைத்து தங்கியிருந்தனா்.

அப்போது கூடாரத்துக்குள் புகுந்த ஒரு கும்பல் கணவரைத் தாக்கிவிட்டு அவரது மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது. இச்சம்வத்தில் ஈடுபட்ட 7 பேரில் 3 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனா். மீதமுள்ள 4 பேரை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com