திருப்பதியைப் போல மாறப் போகிறதா அயோத்தி ராமர் கோயில்?

திருப்பதியை போல பக்தர்கள் கூட்டத்தை கையாளும் நடைமுறைகளுடன் அயோத்தி ராமர் கோயில் மாறப் போவதாகக் கூறப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

லக்னௌ: கோயில் திறக்கப்பட்ட நாள் முதல் ஆயிரக்கணக்கானோர் அயோத்தி ராமர் கோயிலுக்கு திரண்டு வருவதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகளை திருப்பதி தேவஸ்தானம் கோயில் போல மாற்றுவதற்கு அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

பக்தர்கள் எந்த இடையூறும் இல்லாமல் வந்து சுவாமியை தரிசனம் செய்யும் வகையில், வரிசையை முறையை மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அயோத்தியா கோயில் நிர்வாகக் குழுவினர், கடந்த மாதம் நேரடியாக திருப்பதிக்கு வந்து, அங்கு நடைமுறைப்படுத்தும் வரிசையை முறையை நேரில் பார்த்தும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் பல தகவல்களை கேட்டறிந்தும் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருப்பதி திருமலை கோயில், பல ஆண்டுகாலமாக, நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையை மிக நேர்த்தியாக சமாளித்து வருகிறது.

இது குறித்து கோயில் அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் அனில் மிஷ்ரா, கோயிலில் மிகச் சரியான கூட்டத்தை கையாளும் திட்டங்கள் உள்ளன. திருமலை திருப்பதி தேவஸ்தானங்களின் நிபுணத்துவத்தை மற்றொரு கோயில் கேட்கும்போது, அதற்கு சிறந்த தேர்வுகளை நாம் கொடுக்க முடியும்.

மேலும், கோயிலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த எந்தவிதமான நடைமுறைகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்த நீண்ட விளக்கமும், அளிக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆண்டு தோறும் சுமார் 3 கோடி பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருகிறார்கள்.

எனவே, அதன் அடிப்படையில், விரைவில் அயோத்தி ராமர் கோயிலிலும் வரிசை முறைகள் திருப்பதி போல மாற்றப்படும் என்றும், கூண்டு போன்ற அறைகள் அமைக்கப்பட்டு, அதில் பக்தர்கள் நிறுத்திவைக்கப்பட்டு படிப்படியாக சுவாமியை தரிசிக்க அனுப்பப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, வைஷ்ணோ தேவி மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் ஷீரடி கோயில் நிர்வாகங்கள் கூட, திருப்பதி கோயில் நிர்வாகத்திடம், கூட்ட நெரிசலைக் கையாளும் நடைமுறைகளை கேட்டுத் தெரிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, அயோத்தி நகரில், கோயிலை நோக்கிச் செல்லும் அனைத்துச் சாலைகளும் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது, மக்கள் சாலைகளிலேயே வரிசையில் நிற்கும் நிலையும் ஏற்படுகிறது. பல நேரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயமும் எழுகிறது.

எனவே, உடனடியாக அதனை மாற்றி, சிறப்பாக நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com