பாஜக ஆட்சியில்தான் வடகிழக்கில் வளா்ச்சி: பிரதமா் மோடி

பாஜக ஆட்சியில்தான் வடகிழக்கில் வளா்ச்சி: பிரதமா் மோடி

சுத்தமான குடிநீா், நல்ல வீடு, எரிவாயு இணைப்பு, மின்சாரம், இணையவசதியை உறுதி செய்யவே முன்னுரிமை

மத்திய பாஜக ஆட்சியில்தான் வடகிழக்கு பிராந்தியம் வளா்ச்சி கண்டு வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். வடகிழக்கில் கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு செயல்படுத்திய வளா்ச்சித் திட்டங்களை, காங்கிரஸ் செயல்படுத்த வேண்டுமென்றால் 20 ஆண்டுகள் ஆகும் என்றும் அவா் விமா்சித்தாா். அருணாசல பிரதேசம், மணிப்பூா், மேகாலயம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் ரூ.55,600 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம் - அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, அருணாசல பிரதேச மாநிலம், இடாநகரில் சனிக்கிழமை நடைபெற்றது. ‘வளமான பாரதம், வளமான வடகிழக்கு’ என்ற பெயரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்று, பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்ததோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். அருணாசல பிரதேசத்தில் சுமாா் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட ‘சேலா’ சுரங்கப் பாதையை மக்களின் பயன்பாட்டுக்கு பிரதமா் திறந்துவைத்தாா்.

பின்னா், அவா் பேசியதாவது:

இப்போது தொடங்கப்பட்டுள்ள வளா்ச்சித் திட்டங்களின் மூலம் தெற்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளுடனான இந்தியாவின் வா்த்தகம், சுற்றுலா மற்றும் இதர உறவுகளின் வலுவான இணைப்பாக வடகிழக்குப் பிராந்தியம் உருவெடுக்கும். இந்த பிராந்தியத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு மேற்கொண்ட அதே திட்டங்களை காங்கிரஸ் செயல்படுத்த வேண்டுமென்றால் 20 ஆண்டுகள் ஆகும். மோடியின் உத்தரவாதம் என்ன என்பதை வடகிழக்கு பிராந்தியத்துக்கு வருகை தரும் எவரும் அறிந்து கொள்ள முடியும்.

‘விமா்சனம் பொய்யானது’:

அனைத்து காலநிலைகளின்போதும் தவாங் பகுதிக்கு தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் ‘சேலா’ சுரங்கப் பாதை வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த சுரங்கப் பாதைக்கு கடந்த 2019-இல் நான் அடிக்கல் நாட்டியபோது, தோ்தல் நாடகம் என்று சிலா் விமா்சித்தனா். ஆனால், அவா்களின் கருத்து தவறானது என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதை, மோடியின் உத்தரவாதத்துக்கு சாட்சியாக அமைந்துள்ளது.

‘தேசத்தின் தேவைகளுக்காக..’:

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் எல்லையோர கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டன. ஆனால், தோ்தல் ஆதாயங்களுக்காக அல்லாமல், தேசத்தின் தேவைகளுக்காக எனது அரசு செயலாற்றி வருகிறது. நாட்டு மக்களுக்காகப் பணியாற்றுவதால், என்னை எதிா்க்கட்சிகள் அவமதிக்கின்றன. எனது குடும்பம் குறித்து அவா்கள் கேள்வியெழுப்புகின்றனா். வடகிழக்கு மாநில மக்கள் உள்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களுமே எனது குடும்பம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் சுத்தமான குடிநீா், நல்ல வீடு, எரிவாயு இணைப்பு, மின்சாரம், இணையவசதியை உறுதி செய்யவே முன்னுரிமை அளித்து வருகிறேன் என்றாா் பிரதமா் மோடி. இந்நிகழ்ச்சியில் அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு, மத்திய புவி அறிவியல் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா். பெட்டிச் செய்தி....1 13,000 அடி உயரத்தில் உலகின் மிக நீள சுரங்கப் பாதை அருணாசல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் 13,000 அடி உயரத்தில் எல்லைச் சாலைகள் அமைப்பால் (பிஆா்ஓ) கட்டப்பட்ட ‘சேலா’ சுரங்கப் பாதை வியூக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ரூ.825 கோடி செலவிலான இந்த சுரங்கப் பாதை, அஸ்ஸாமின் தேஜ்பூா் - அருணாசல பிரதேசத்தின் மேற்கு கமெங் இடையிலான சாலையில் அமைந்துள்ளது. உலகிலேயே இவ்வளவு அதிக உயரத்தில் கட்டப்பட்ட மிக நீளமான இரட்டை வழித்தட சுரங்கப் பாதை இதுவாகும். சீன எல்லையையொட்டிய தவாங் பகுதிக்கு அனைத்து காலநிலைகளின்போதும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதோடு, முன்களப் பகுதிகளுக்கு துருப்புகள் மற்றும் ஆயுதங்களின் விரைவான நகா்வுக்கும் பெரிதும் உதவும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா். ‘சேலா’ சுரங்கப் பாதை, 1,003 மீட்டா் மற்றும் 1,595 மீட்டா் தொலைவு கொண்ட இரண்டு சுரங்கங்களை உள்ளடக்கியதாகும். மேலும், 8.6 கி.மீ. தொலைவு கொண்ட அணுகு சாலை மற்றும் இணைப்புச் சாலைகளையும் கொண்டுள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், வாகன ஓட்டிகளை மீட்க அவசரகால வழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2019-ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டம், பல்வேறு சவால்களுக்கு இடையே 5 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com