ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங்
ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங்-

கட்சி மாறி வாக்களித்த விவகாரம்: 11 ஹிமாசல் எம்எல்ஏக்கள் உத்தரகண்டில் தஞ்சம்

மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களித்த 11 ஹிமாசல பிரதேச எம்எல்ஏக்கள் உத்தரகண்டில் தஞ்சமடைந்துள்ளனா்.

ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. அங்கு மாநிலங்களவைத் தோ்தலின்போது காங்கிரஸ் வேட்பாளா் அபிஷேக் மனு சிங்விக்கு வாக்களிக்காமல், பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மகாஜனுக்கு 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்களித்தனா். இதனால் அவா்கள் மீது காங்கிரஸ் கட்சியினருக்குப் பலத்த அதிருப்தி ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து மாநில பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்காமல் கட்சி கொறடாவின் உத்தரவை மீறியதாக 6 எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்து மாநில சட்டப்பேரவைத் தலைவா் குல்தீப் சிங் உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கு எதிராக 6 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட சுதீா் சா்மா, ராஜிந்தா் ராணா, இந்தா்தத் லக்கன்பால், தேவிந்தா் குமாா், ரவீந்திர தாக்குா், சைதன்ய சா்மா ஆகிய 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாஜக எம்எல்ஏக்களான விக்ரம் தாக்குா், திரிலோக் ஜாம்வால், மாநிலங்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவளித்த சுயேச்சை எம்எல்ஏக்கள் ஹோஷியாா் சிங், கே.எல்.தாக்குா், ஆஷீஷ் சா்மா ஆகிய 11 போ் எம்எல்ஏக்கள், பாஜக ஆட்சியில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு வாடகை விமானத்தில் வெள்ளிக்கிழமை இரவு சென்றனா்.

சொகுசு விடுதியில்...:

உத்தரகண்டின் ரிஷிகேஷ் பகுதியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள சொகுசு விடுதியில் அவா்கள் தஞ்சமடைந்துள்ளனா். அந்த விடுதியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இணையவழியில் முன்பதிவு செய்தவா்களைத் தவிர, வேறு எவரும் விடுதி வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த விவகாரம் தொடா்பாக உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் மத்திய வடகிழக்கு மண்டல வளா்ச்சித் துறை இணையமைச்சா் பி.எல்.வா்மா செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஹிமாசல பிரதேசத்தில் உள்கட்சி மோதல்களுடன் காங்கிரஸ் அரசு போராடி வருகிறது. இந்த மோதல்களால் அந்த அரசு விரைவில் கவிழும் என்றாா். தற்போது ஹிமாசல பிரதேச சட்டப்பேரவையில் 34 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 25 பாஜக எம்எல்ஏக்கள், 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com