தேர்தல் ஆணையர் ராஜிநாமா: ”ஜனநாயகத்தை சர்வாதிகாரம் கைப்பற்றும்” -காங். வேதனை

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிக்கப்படவுள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜிநாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2027ஆம் ஆண்டு வரை பதவிக் காலம் உள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேற்று (மார்ச்.9) திடீரென ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமாவைத் தொடர்ந்து தேர்தல் ஆணையர்கள் மூவரில் தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளார்.

தேர்தல் ஆணையர் ராஜிநாமா குறித்து கவலை தெரிவித்துள்ள முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், அரசமைப்பின்படி, சுதந்திர அமைப்புகளாக செயல்படும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நிறுவனங்களை ”திட்டமிட்டு அழிக்கும்” முயற்சி நிறுத்தப்படாவிட்டால், ஜனநாயகத்தின் இருப்பிடத்தை சர்வாதிகாரம் கைப்பற்றிவிடும் என்று கவலை தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையர் ராஜிநாமா குறித்து கவலை தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தேர்தல் ஆணையமா(கமிஷனா) அல்லது தேர்தல் நீக்கமா(ஒமிஷனா) மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிக்கப்படவுள்ள நிலையில், இந்தியாவில் இப்போது ஒரேயொரு தேர்தல் ஆணையர் மட்டுமே உள்ளார்... ஏன்?” எனக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

”ஏற்கெனவே கூறியபடி, நம்முடைய சுதந்திர அமைப்புகளை திட்டமிட்டு அழிக்கும் முயற்சியை நாம் நிறுத்தாவிட்டால், சர்வாதிகாரத்தால் நம்முடைய ஜனநாயகம் கைப்பற்றப்படும்!

நாட்டின் சுதந்திர அமைப்புகளில் கடைசியாக எஞ்சியிருந்த தேர்தல் ஆணையமும் தற்போது வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுப்பதற்கான புதிய நடைமுறை மூலம், ஆளுங்கட்சிக்கும் பிரதமருக்கும் சர்வ அதிகாரமும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஏன் புதிய தேர்தல் ஆணையர் நியமிக்கப்படவில்லை?

மோடி அரசு இந்த கேள்விகளுக்கு கட்டாயம் பதிலளிப்பதுடன், உரிய விளக்கத்தையும் தர வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “மக்களவைத் தேர்தல் காலத்தில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜிநாமா செய்திருப்பதன் மூலம், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் நலன் கவலையளிப்பதாக உள்ளது.

தேர்தல் ஆணையம் போன்ற சுதந்திர அமைப்புகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை சுத்தமாக இல்லை. அவற்றின் மீது அரசால் கொடுக்கப்படும் அழுத்தம் கவலையளிக்கிறது.

2019 தேர்தலின் போது, பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிரான கருத்துக்களை முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லாவசா தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக,அவர் பல்வேறு விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.ஜனநாயக மரபுகள் அழிக்கப்பட வேண்டுமென்பதில் அரசு உறுதியாக இருப்பதை இந்த போக்கு வெளிக்காட்டுகிறது.

இதற்கான விளக்கமளிக்கப்பட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் எந்தச் சூழலிலும் ஒருதலைப்பட்சமாக செயல்படாமல் இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

நாட்டில் முக்கியமான ஜனநாயக அமைப்புகளின் சுதந்திரமான செயல்பாடு பாதிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com