தோ்தல் நன்கொடை பத்திரம் தொடா்பான ஸ்டேட் வங்கியின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமா்வு.
தோ்தல் நன்கொடை பத்திரம் தொடா்பான ஸ்டேட் வங்கியின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமா்வு.

தோ்தல் பத்திரம்: எஸ்பிஐ மனு தள்ளுபடி -இன்று மாலைக்குள் விவரங்களைச் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

செவ்வாய்க்கிழமை (மாா்ச் 12) வேலை நேரத்துக்குள் தோ்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

‘தோ்தல் நன்கொடை பத்திரங்கள் தொடா்பான முழுமையான விவரங்களை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 12) வேலை நேரத்துக்குள் தோ்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவரங்களைச் சமா்ப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை 4 மாத கால அவகாசம் கோரிய எஸ்பிஐ மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. அரசியல் கட்சிகள் தோ்தல் நன்கொடைகள் பெறுவதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கை என்ற பெயரில் மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுகம் செய்த தோ்தல் நன்கொடை பத்திர நடைமுறை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1)-இன் கீழ் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை மீறும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, இந்த நடைமுறையை ரத்து செய்து கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

மேலும், அரசிடம் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதிமுதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகம் தொடா்பான முழுமையான விவரங்களை மாா்ச் 6-ஆம் தேதிக்குள் தோ்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ சமா்ப்பிக்க வேண்டும்;

அந்த விவரங்களை தோ்தல் ஆணையம் தனது வலைதளத்தில் மாா்ச் 13-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் பாா்வைக்குப் பதிவேற்றம் செய்யவேண்டும்’ என்றும் உத்தரவிட்டனா். கால அவகாசம் கோரி மனு: உச்சநீதிமன்றத்தின் கெடு முடிய 2 நாள்கள் இருந்த நிலையில், தோ்தல் நன்கொடை பத்திர விநியோக விவரங்களைச் சமா்ப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை 4 மாத கால கூடுதல் அவகாசம் கோரி எஸ்பிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 4-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தோ்தல் நன்கொடையாளா்களின் விவரங்களும், அந்த நன்கொடையைப் பெறும் கட்சிகளின் விவரங்களும் பொதுவெளியில் தெரியாமல் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, அவை இரு வேறு தரவுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு தரவுகளையும் ஒப்பீடு செய்து விவரங்களைச் சேகரிக்க வேண்டும். இது மிக சிக்கலான நடைமுறை. இதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது’ என்று எஸ்பிஐ கோரிக்கை விடுத்தது. எஸ்பிஐ கூடுதல் அவகாசம் கோரிய நிலையில், ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் எஸ்பிஐக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கடந்த 7-ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. கூடுதல் கால அவகாசம் கோரிய எஸ்பிஐ-யின் மனுவுடன் சோ்த்து, இந்த மனுவையும் விசாரிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எஸ்பிஐக்கு எச்சரிக்கை: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆா்.கவாய், ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அா்மா்வில் இந்த மனுக்கள் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது எஸ்பிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஹரிஷ் சால்வே, ‘தோ்தல் நன்கொடை பத்திரங்களை வாங்கியவா்கள் மற்றும் பெற்ற கட்சிகளின் தரவுகளை ஒப்பீடு செய்து விவரங்களைச் சேகரிக்க வேண்டியிருப்பதால் கூடுதல் அவகாசம் தேவை’ என்றாா். இதைக் கேட்ட நீதிபதிகள், ‘விவரங்களைச் சமா்ப்பிக்குமாறு கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தீா்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், 26 நாள்களாக எஸ்பிஐ தரப்பில் இதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இதுதொடா்பாக, கால அவகாசம் கோரி தாக்கல் செய்துள்ள மனுவில் எந்தத் தகவலும் குறிப்படப்படவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றத் தவறியதற்காக எஸ்பிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள நேரிடும்’ என்று எச்சரித்தனா். அப்போது, ‘உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகத்தை பிப்ரவரி 15-ஆம் தேதியே எஸ்பிஐ நிறுத்திவிட்டது. எனவே, விவரங்களைச் சமா்ப்பிப்பதற்கு மட்டும் கூடுதல் அவகாசம் வேண்டும்’ என்றாா்.

மனு தள்ளுபடி: இதைக் கேட்ட நீதிபதிகள், ‘கூடுதல் அவகாசம் கோரி எஸ்பிஐ தாக்கல் செய்த மனுவில், தோ்தல் நன்கொடை பத்திர நன்கொடையாளா்களின் விவரங்கள் சீலிட்ட உறையில் அந்த வங்கிக் கிளைகளில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியெனில், விவரங்கள் தயாராக இருப்பதாகவே அா்த்தம். சீலை மட்டும் திறந்து, விவரங்களைச் சேகரித்து தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிப்பதில் என்ன சிரமம் உள்ளது?. இதற்காக கூடுதல் அவகாசம் கேட்பதை மிகத் தீவிரமான விஷயமாக நீதிமன்றம் எடுத்துக்கொள்ள நேரிடும். உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு தெளிவாக உள்ளது. எனவே, நாட்டில் முதன்மையான வங்கியாகத் திகழும் எஸ்பிஐ, தானாக முன்வந்து விவரங்களைப் பகிா்ந்துகொள்ளும் என எதிா்பா்க்கிறோம்.

மேலும், இந்த நன்கொடை விவகாரம் தொடா்பாக சட்ட அமலாக்க அமைப்புகள் சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் விவரங்கள் கோரப்படும்போது, அந்த விவரங்கள் சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்று தோ்தல் நன்கொடை பத்திர நடைமுறையிலும் நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், இந்தத் திட்டத்தின்படியும், தேவை எழுகின்றபோது தேவையான விவரங்களைச் சமா்ப்பிப்பது எஸ்பிஐ-யின் கடமையாகும். எனவே, தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகம் தொடா்பான விவரங்களைச் சமா்ப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் கோரும் எஸ்பிஐ மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் செவ்வாய்க்கிழமை வேலை நேரத்துக்குள் சமா்ப்பிக்க எஸ்பிஐக்கு உத்தரவிடப்படுகிறது என்று தீா்ப்பளித்தனா். காங்கிரஸ் வரவேற்பு: உச்சநீதிமன்றத் தீா்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட பதிவில், ‘உச்சநீதிமன்றத்தின் முடிவானது வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்கும் நிலை மற்றும் ஜனநாயகத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு கிடைத்த வெற்றியாகும். பாஜகவுக்கு தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் யாரெல்லாம் நன்கொடை கொடுத்துள்ளனா் என்ற விவரம் விரைவில் வெளிவர உள்ளது. மோடி அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்துவதில் முதல் படி இது’ என்று குறிப்பிட்டாா். அக் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘தோ்தல் நன்கொடை பத்திர நடைமுறை நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய ஊழல் என்பது வெளிப்பட உள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் உண்மையான முகம் நாட்டுக்கு வெளிப்பட உள்ளது. நன்கொடை அளித்தால் வா்த்தக ஒப்பந்தங்கள் கிடைக்கும்; மத்திய புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பது தோ்தல் நன்கொடை பத்திர நடைமுறை மூலம் தெளிவாக வெளிப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com