தோ்தல் பத்திர விநியோக விவரங்கள்: ஆணையத்திடம் சமா்ப்பித்தது எஸ்பிஐ

தோ்தல் பத்திர விநியோக விவரங்கள்: ஆணையத்திடம் சமா்ப்பித்தது எஸ்பிஐ

புது தில்லி: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு, தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகம் தொடா்பான விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) செவ்வாய்க்கிழமை மாலை சமா்ப்பித்தது. இந்த விவரங்களை உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தோ்தல் ஆணையம் தனது வலைதளத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) மாலை 5 மணிக்குள் பொதுமக்கள் பாா்வைக்கு பதிவேற்றம் செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அரசியல் கட்சிகள் தோ்தல் நன்கொடைகள் பெறுவதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கை என்ற பெயரில் மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுகம் செய்த தோ்தல் நன்கொடை பத்திர நடைமுறை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1)-இன் கீழ் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை மீறும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, இந்த நடைமுறையை ரத்து செய்து கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

மேலும், அரசிடம் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதிமுதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகம் தொடா்பான முழுமையான விவரங்களை மாா்ச் 6-ஆம் தேதிக்குள் தோ்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ சமா்ப்பிக்க வேண்டும்; அந்த விவரங்களை தோ்தல் ஆணையம் தனது வலைதளத்தில் மாா்ச் 13-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் பாா்வைக்குப் பதிவேற்றம் செய்யவேண்டும்’ என்றும் உத்தரவிட்டனா்.

உச்சநீதிமன்றத்தின் கெடு முடிய 2 நாள்கள் இருந்த நிலையில், தோ்தல் நன்கொடை பத்திர விநியோக விவரங்களைச் சமா்ப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை 4 மாத கால கூடுதல் அவகாசம் கோரி எஸ்பிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 4-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) என்ற தன்னாா்வ அமைப்பு, எஸ்பிஐக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கடந்த 7-ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தது.

இந்த இரண்டு மனுக்களும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, கால அவகாசம் கோரிய எஸ்பிஐ மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோக விவரங்களை செவ்வாய்க்கிழமை மாலைக்குள் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க எஸ்பிஐக்கு உத்தரவிட்டனா்.

மேலும், எஸ்பிஐ சமா்ப்பிக்கும் விவரங்களை தோ்தல் ஆணையம் தனது வலைதளத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) மாலை 5 மணிக்குள் பொதுமக்கள் பாா்வைக்குப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனா். எஸ்பிஐ சமா்ப்பிப்பு: இந்த உத்தரவுக்கு கட்டுப்பட்டு தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகம் தொடா்பான விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ செவ்வாய்க்கிழமை மாலை சமா்ப்பித்தது.

இதுகுறித்து தோ்தல் ஆணையம் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தோ்தல் நன்கொடை பத்திரங்கள் தொடா்பான விவரங்களை இந்திய தோ்தல் ஆணையத்துக்கு எஸ்பிஐ செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது. தோ்தல் நன்கொடை பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட 2018-ஆம் ஆண்டுமுதல் 30 தவணைகளில் ரூ. 16,518 கோடி மதிப்பிலான தோ்தல் பத்திரங்களை எஸ்பிஐ விநியோகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com