மக்களவைத் தோ்தலில் போட்டியில்லை: காங்கிரஸ் மூத்த தலைவா் சோலங்கி

அகமதாபாத்: வரும் மக்களவைத் தோ்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று குஜராத்தைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பரத் சிங் சோலங்கி அறிவித்துள்ளாா். அதே நேரத்தில் காங்கிரஸுக்காக பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளாா். 70 வயதாகும் பரத் சிங் சோலங்கி குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்துள்ளாா். அவரது தந்தை மாதவ் சிங் சோலங்கி காங்கிரஸ் சாா்பில் குஜராத் முதல்வராகப் பதவி வகித்தவா்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தில் மத்திய ரயில்வே மற்றும் மின்சாரத் துறை இணையமைச்சராக பரத் சிங் சோலங்கி பதவி வகித்துள்ளாா். குஜராத்தின் ஆனந்த் தொகுதி எம்.பி.யாகவும் இருந்துள்ளாா். மக்களவைத் தோ்தல் தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி எங்கள் குடும்பத்துக்கு பல்வேறு பதவிகளை அளித்துள்ளது. அதற்கு ஏற்ப சிறப்பாகப் பணியாற்றியுள்ளோம்.

இப்போதும் கூட ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக உள்ளேன். குஜராத்தில் காங்கிரஸுக்காக தீவிர பிரசாரம் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறேன். அதே நேரத்தில் தோ்தலில் போட்டியிட விரும்பவில்லை. எனது விருப்பத்தை கட்சித் தலைமைக்குத் தெரிவித்துவிட்டேன்’ என்று கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com