சிபிஎஸ்இ தலைவராக ராகுல் சிங் நியமனம்
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தலைவராக ராகுல் சிங் புதன்கிழமை நியமிக்கப்பட்டாா்.
மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. சிபிஎஸ்இ தலைவராகப் பொறுப்பு வகிக்கும் நிதி சிப்பா், நீதி ஆயோக் அமைப்பின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து, மத்திய பணியாளா் நலத் துறையின் கூடுதல் செயலராகப் பதவி வகிக்கும் ராகுல் சிங், சிபிஎஸ்இ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
மத்திய பணியாளா் நலத் துறையின் கூடுதல் செயலராக ஏ.பி.தாஸ் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளாா். ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய தூய்மை கங்கை இயக்கத்தின் தலைமை இயக்குநராக ராஜீவ் குமாா் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளாா்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கூடுதல் செயலராக ஞானேஷ் பாரதி, மத்திய செய்தி ஒலிபரப்புத் துறையின் கூடுதல் செயலா்-நிதி ஆலோசகராக தீபக் நரேன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளா் நலத் துறை தெரிவித்துள்ளது.
