2024 மக்களவைத் தோ்தல் அறிவிப்பு! முழு விவரம்

மக்களவைத் தோ்தலுக்கான தேதிகளை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2024 மக்களவைத் தோ்தல் அறிவிப்பு! முழு விவரம்

தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையில், தில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் மக்களவைத் தோ்தல், இடைத்தேர்தல் மற்றும் ஆந்திரம் உள்பட 4 மாநில பேரவைத் தோ்தல்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலுடன் ஆந்திரம், ஒடிஸா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பேரவைத் தோ்தல் தேதிகளும் வெளியிடப்பட்டன.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் எப்படி நடந்தது?

கடந்த 2019-ஆம் ஆண்டில் மாா்ச் 10-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் அட்டவணை வெளியிடப்பட்டது.

ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்பட்டது.

மே 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல்

2014ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடத்தப்பட்டது.

இதற்கான தேதிகள், அந்த ஆண்டின் மாா்ச் 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன;

மே 16-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் புதிய தேர்தல் ஆணையர்களாக பதவியேற்றுக் கொண்ட ஞானேஷ்வர் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் கூட்டாக தேர்தல் தேதியை அறிவிக்கவிருக்கிறார்கள்.

ஜனநாயகத் திருவிழா என்று அழைக்கப்படும் மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவிருக்கிறது.

தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் ஆணையக அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர் சந்திப்பு நடக்கவிருக்கிறது.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பான செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது.

இந்தாண்டில் இதுதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாளர் சந்திப்பு; மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர் விவரங்களை கட்சிகள் நாளிதழ்களில் வெளியிட கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியானவர்களை குடிமக்கள் தேர்வு செய்ய வேண்டும்.

வாக்களிக்க விண்ணப்பித்தவர்களில் ஏப்ரல் 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கலாம்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாக்குப்பதிவை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. காகித தாள்கள் மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படும்.

85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் விரும்பும்பட்சத்தில் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொத்த வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேர், பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேர். இவர்களில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 2.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள்.

மக்களவைத் தேர்தலில் 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன. 1.82 கோடி முதன் முறை வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள்.

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இதுவரை 800 மாவட்ட ஆட்சியர்களுடன் நேரடியாக பேசியுள்ளேன். ஒட்டுமொத்தமாக 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள். இவர்களுக்கு வசதியாக 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவிருக்கின்றன.

தேர்தலை திருவிழா போன்று நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். தேர்தல் திருவிழாவில் எங்களுடன் சேர்ந்து நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள்.

தேர்தலை வன்முறையின்றி நடத்த ட்ரோன் மூலம் சர்வதேச எல்லைகள் கண்காணிக்கப்படும். நாடு முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகள் சோதனைக்கு உள்ளாக்கப்படும். வேட்பாளர்கள் விவரங்களை செயலியில் தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என்று கூறினார்.

தேர்தல் ஆணையம் முன் 4 சவால்கள்

பண பலம், ஆள் பலம், வதந்திகள், விதிமீறல்கள் ஆகியவை தேர்தல் ஆணையம் முன் உள்ள நான்கு சவால்கள் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தேதிகள் அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

ஹெலிகாப்டர்கள், தனி விமானங்கள் கண்காணிக்கப்படும்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

விளம்பரங்களை நம்பத் தகுந்த செய்திகளாக்கக் கூடாது.

அரசியல் கட்சிகளின் நட்சத்திரப் பேச்சாளர்கள் கண்ணியத்துடன் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.

மத ரீதியாகவோ, சாதிய ரீதியாகவோ விமர்சித்துப் பேசக் கூடாது.

தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகள், மாற்றத்திறநாளிகளை ஈடுபடுத்தக் கூடாது.

தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும்.

பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.

ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட தேர்தலில் விளவங்கோடு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

ஆந்திர மாநிலத்துக்கு மே 13ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்.

சிக்கிம் மாநிலத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல்

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுச்சேரிக்கும் அன்றைய தினமே மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கும்.

வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை ஜூன் 04ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

தமிழ்நாட்டில் வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கும். வேட்பு மனுத்தாக்கல் செய்ய மார்ச் 27ஆம் தேதி கடைசி நாள்.

முதல் கட்டம்

மொத்தமுள்ள 543 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறவிருக்கிறது.

இரண்டாம் கட்டம்

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நாளில், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

மூன்றாம் கட்டம்

நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

நான்காம் கட்டம்

நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே 13ஆம் தேதி 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறுகிறது.

ஐந்தாம் கட்டம்

ஐந்தாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 20ஆம் தேதி 49 தொகுதிகளுக்கு நடைபெறவிருக்கிறது.

ஆறாம் கட்டம்

ஆறாம் கட்ட தேர்தல் மே 25ம் தேதி நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது.

ஏழாம் கட்டம்

ஏழாம் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

ஏழு கட்டங்களிலும் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கிறது. தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் கிட்டத்தட்ட 45 நாள்கள் இடைவெளி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. முதல் கட்டம் ஏப்ரல் 19ஆம் தேதியும், இறுதிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com