
தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், கைதான கவிதாவை மார்ச் 23ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சித் தலைவா் சந்திரசேகா் ராவின் மகளும் கட்சி எம்எல்சி-யுமான கே.கவிதாவை அமலாக்கத் துறையினா் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பஞ்சாராஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் இல்லத்தில் வைத்து அவரை கைது செய்த அமலாக்கத் துறையினா், விசாரணைக்காக தில்லிக்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக, கவிதாவுக்கு சொந்தமான இடங்களில் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து மாலை வரை அமலாக்கத் துறையினா் அதிரடி சோதனை மேற்கொண்டனா். பின்னா், மாலையில் அவா் கைது செய்யப்பட்டாா்.
இதனிடையே, பிஆா்எஸ் செயல் தலைவரும் கவிதாவின் சகோதரருமான கே.டி.ராமராவ், முன்னாள் அமைச்சா் ஹரீஷ் ராவ் மற்றும் கட்சித் தொண்டா்கள், கவிதாவின் வீட்டில் திரண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனா். அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ராமராவ் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதுதொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் பரவியது.
இந்த நிலையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், கைதான கவிதாவை தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது அவரை மார்ச் 23ஆம் தேதி வரை காவலில் வைக்க சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார். அமலாக்கத்துறை தரப்பில் 10 நாள்கள் காவல் கோரிய நிலையில் 7 நாள்கள் மட்டும் கவிதாவை காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
முன்னதாக தனது கைது சட்டவிரோதமானது எனக் கூறிய அவர், நாங்கள் நீதிமன்றத்தில் போராடுவோம் என்றார்.