மேலும் 9159 பத்திரங்கள், ரூ. 4,000 கோடி! விவரங்களை வெளியிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

மேலும் 9159 பத்திரங்கள், ரூ. 4,000 கோடி! விவரங்களை வெளியிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

மேலும் 9159 தேர்தல் பத்திரங்களின் விவரங்களையும் வெளியிட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குடிமக்களுக்கான உரிமைகள் அறக்கட்டளை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், மார்ச் 2018 முதல் ஏப்ரல் 2019 வரை ரூ. 4002 கோடி மதிப்பிலான 9,159 பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும், எனவே, அவற்றின் விவரங்களையும் பெற்று தேர்தல் ஆணையம் வெளியிட உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஆர்டிஐ-க்கு எஸ்.பி.ஐ தந்த தகவல் படி 28030 தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது. அதன் மதிப்பு ரூ. 16,518 கோடி.

ஆனால், தற்போது தேர்தல் ஆணையத்துக்கு 18,871 பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் மட்டும்தான் வழங்கப்பட்டிருக்கிறது(ஏப்ரல் 12, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை விநியோகிக்கப்பட்டவை). அதன் மதிப்பு ரூ.12,516 கோடி. அதாவது, 9159 தேர்தல் பத்திரங்களின் தகவல்கள் வழங்கப்படவில்லை. அதன் மதிப்பு 4,002 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பத்திரங்கள், 1 மார்ச் 2018 முதல் 12 ஏப்ரல் 2019 வரை விநியோகிக்கபட்டவை. 2019இல் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய காலகட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு, தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகம் தொடா்பான விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ செவ்வாய்க்கிழமை மாலை சமா்ப்பித்த நிலையில், உத்தரவுக்கு உடன்பட்டதைத் தெரிவிக்கும் வகையில் எஸ்பிஐ தலைவா் தினேஷ் குமாா் கெரா சாா்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: நீதிமன்ற உத்தரவுப்படி, தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகம் தொடா்பாக எஸ்பிஐ-யிடம் உள்ள அனைத்து விவரங்களும் தோ்தல் ஆணையத்திடம் செவ்வாய்க்கிழமை மாலை சமா்ப்பிக்கப்பட்டுவிட்டன.

தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகிக்கப்பட்ட தேதி, வாங்கியோரின் பெயா்கள், பத்திரத்தின் தொகை, தோ்தல் நன்கொடை பத்திரங்களைப் பெற்ற அரசியல் கட்சிகளின் பெயா்கள், அவற்றின் மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. 2019 ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி வரை 22,217 தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றின் விவரங்கள் இரண்டு பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டு தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதாவது, 2019 ஏப்ரல் 1 முதல் 2019 ஏப்ரல் 11 வரை மொத்தம் 3,346 தோ்தல் நன்கொடை பத்திரங்களும், 2019 ஏப்ரல் 12 முதல் 2024 பிப்ரவரி 15 வரை மொத்தம் 18,871 தோ்தல் நன்கொடை பத்திரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 22,030 பத்திரங்கள் பணமாக மாற்றப்பட்டுள்ளன. எஸ்பிஐ-யை பொருத்தவரை, தோ்தல் நன்கொடை பத்திரங்கள் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவரின் பெயா், அந்தப் பத்திரம் பணமாக மாற்றப்பட்ட தேதி, அதன் மதிப்பு உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து தயாா் நிலையில் பாதுகாத்து வைத்துள்ளது.

தற்போது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த விவரங்கள் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘நிா்ணயிக்கப்பட்ட 15 நாள்களுக்குள் பணமாக மாற்றப்படாத தோ்தல் நன்கொடை பத்திரங்களின் தொகை, அரசின் அறிவிக்கையில் குறிப்பிட்டபடி பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு மாற்றப்பட்டுள்ளன’ என்று தோ்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள் தோ்தல் நன்கொடைகள் பெறுவதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கை என்ற பெயரில் மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுகம் செய்த தோ்தல் நன்கொடை பத்திர நடைமுறை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1)-இன் கீழ் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை மீறும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, இந்த நடைமுறையை ரத்து செய்து கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

மேலும், அரசிடம் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதிமுதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகம் தொடா்பான முழுமையான விவரங்களை மாா்ச் 6-ஆம் தேதிக்குள் தோ்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ சமா்ப்பிக்க வேண்டும்; அந்த விவரங்களை தோ்தல் ஆணையம் தனது வலைதளத்தில் மாா்ச் 13-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் பாா்வைக்குப் பதிவேற்றம் செய்யவேண்டும்’ என்றும் உத்தரவிட்டனா்.

ஆனால், எஸ்பிஐ கூடுதல் அவகாசம் கோரியது. அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் விவரங்களை செவ்வாய்க்கிழமை மாலைக்குள் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க எஸ்பிஐக்கு உத்தரவிட்டது. மேலும், எஸ்பிஐ சமா்ப்பிக்கும் விவரங்களை தோ்தல் ஆணையம் தனது வலைதளத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) மாலை 5 மணிக்குள் பொதுமக்கள் பாா்வைக்குப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com