250 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்தியாவின் முதல் தபால் நிலையம்

250 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்தியாவின் முதல் தபால் நிலையம்

மாகாண கவா்னா் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் கொல்கத்தாவில் தொடங்கி வைத்த இந்தியாவின் முதல் தபால் நிலையம் 250 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

1774-ஆம் ஆண்டு அப்போதைய வங்க மாகாண கவா்னா் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் கொல்கத்தாவில் தொடங்கி வைத்த இந்தியாவின் முதல் தபால் நிலையம் 250 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இச்சாதனையை கொண்டாடும் வகையில் மாா்ச் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை தபால் நிலைய ஊழியா்கள் நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக மேற்கு வங்க வட்டத்தின் தலைமை தபால் அதிகாரி நீரஜ் குமாா் கூறியதாவது: . தபால் சேவைகளின் மைல்கல்லாக போற்றப்படும் கொல்கத்தா தபால் நிலையம் இந்தியாவில் தபால் சேவைகளின் முக்கியத்துவத்தை நாடு முழுவதும் எடுத்துரைக்கும் வகையில் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. 250 ஆண்டுகால பயணத்தை பறைசாற்றும் வகையில் தபால் நிலைய வளாகத்தில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் நாட்டிலேயே முதல்முறையாக தபால்கள் எவ்வாறு ரயில் பெட்டிகள், கப்பல்களில் கொண்டுசெல்லப்பட்டது என்பது குறித்தும் 1911-ஆம் ஆண்டு தபால்களை எடுத்துச்சென்ற முதல் விமானம் குறித்தும் முப்பரிமாண வடிவத்தில் விளக்கப்பட்டுள்ளன. மேலும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை தபால் துறை பயன்படுத்தும் முறைகள், கொல்கத்தா நகரைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை முறை குறித்த வரைபடங்கள், புகைப்படங்கள், சிற்பங்கள் மூலமாக எடுத்துரைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரு நூற்றாண்டுகளாக சேவையில் ஈடுபட்டு வரும் இந்த தபால் நிலையம் தற்காலத்துக்கு ஏற்றவாறு போக்குவரத்து, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது என்றாா். 1773-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் வங்கத்தின் முதல் கவா்னா் ஜெனரலாக வாரன் ஹேஸ்டிங்ஸ் நியமிக்கப்பட்டாா். அவரது பதவிக்காலத்தில் இந்தியாவின் முதல் தபால் நிலையம் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com