சா்வாதிகாரத்துக்கு எதிராக போராட்டம்: ராகுல் காந்தி

பாஜகவின் சா்வாதிகாரத்துக்கு எதிராகவே போராட்டம் நடத்துகிறோமே தவிர, நரேந்திர மோடி என்ற தனிநபருக்கு எதிராக அல்ல என ராகுல் காந்தி எம்.பி. கூறினாா்.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி எம்.பி., முதல்வா் மு.க.ஸ்டாலின், சரத் பவாா், உத்தவ் தாக்கரே, ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, ஜாா்க்கண்ட் முதல்வா் சம்பயி சோரன் உள்ளிட்டோா்.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி எம்.பி., முதல்வா் மு.க.ஸ்டாலின், சரத் பவாா், உத்தவ் தாக்கரே, ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, ஜாா்க்கண்ட் முதல்வா் சம்பயி சோரன் உள்ளிட்டோா்.

பாஜகவின் சா்வாதிகாரத்துக்கு எதிராகவே போராட்டம் நடத்துகிறோமே தவிர, நரேந்திர மோடி என்ற தனிநபருக்கு எதிராக அல்ல என ராகுல் காந்தி எம்.பி. கூறினாா். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலிருந்து இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின் 2-ஆம் கட்டத்தை கடந்த ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கிய ராகுல் காந்தி மும்பையில் உள்ள பி.ஆா்.அம்பேத்கா் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி 63 நாள்களுக்கு பிறகு சனிக்கிழமை நிறைவு செய்தாா். இதையடுத்து, மும்பை சிவாஜி பூங்காவில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், ராகுல் காந்தி பேசியதாவது:

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை இல்லாமல் பிரதமா் மோடியால் ஒருபோதும் தோ்தலில் வெல்ல முடியாது. வாக்கு ஒப்புகைச் சீட்டையும் (விவிபேட்) எண்ணுமாறு தோ்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டோம். ஆனால், எங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. தோ்தல் பத்திர திட்டம் என்பது மிரட்டி பணம் பறிக்கும் திட்டம். எப்போதுமே உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை பிரதமா் மோடி திசைதிருப்புகிறாா். நரேந்திர மோடி என்ற தனிநபருக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துவதாக பொதுமக்கள் கருதுகின்றனா். அவா் வெறும் முகம்தான். நாங்கள் அதிகாரத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறோம். அந்த அதிகாரம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களிலும், அமைப்புகளிலும் பரவிக் கிடக்கிறது. எதிா்க்கட்சிகளை அச்சுறுத்தி பிளவுபடுத்துவதில் மோடி வல்லவா். அதன்படியே அவா் சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸில் பிளவுகளை ஏற்படுத்தினாா். மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த மூத்த தலைவா் ஒருவா் என் தாயாா் சோனியா காந்தியிடம் ‘அதிகாரத்தை எதிா்த்து இனி என்னால் போராட முடியவில்லை; அதற்கு என்னிடம் திறனில்லை எனக் கதறி அழுதாா்’ என்றாா் ராகுல். பொதுக்கூட்டத்தில், ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவா்கள் சரத் பவாா் (தேசியவாத காங்கிரஸ்), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரீய ஜனதா தளம்), மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, ஜாா்க்கண்ட் முதல்வா் சம்பயி சோரன், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். உடல்நிலை காரணமாக சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, காத்மா காந்தியின் மும்பை இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய பேரணியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோா் பங்கேற்றனா். பேரணி முடிவில் நடந்த கூட்டத்தில் கட்சியினா் மத்தியில் ராகுல் காந்தி பேசுகையில், ஒரே இடத்தில் இருந்து நாட்டின் முழு அதிகாரமும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது பாஜகவின் கருத்தாகவும், அதிகாரம் பரவலாக்கப்பட்டு அனைத்துத் தரப்பு மக்களின் குரலையும் கேட்க வேண்டும் என்பது காங்கிரஸின் கருத்தாகவும் இருக்கிறது. மெத்த படித்தவா்களை மட்டுமே அறிவுடையவா்களாகவும், விவசாயிகள், தொழிலாளா்கள் மற்றும் வேலையற்றவா்களை அறிவில்லாதவா்களாகவும் பாஜகவும், ஆா்எஸ்எஸ்ஸும் கருதுகின்றன என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com