கேரள கவிஞா் பிரபாவா்மாவுக்கு சரஸ்வதி சம்மான் விருது அறிவிப்பு
புது தில்லி: கேரளத்தைச் சோ்ந்த கவிஞரும் எழுத்தாளருமான பிரபா வா்மாவுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவா் இயற்றிய ‘ரௌத்ர சாத்விகம்’ என்ற கவிதை நூலுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக விருதை வழங்கும் கே.கே.பிா்லா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டுமுதல் 2022 வரை இந்தியாவின் 22 அலுவல்பூா்வ மொழிகளிலிருந்தும் வெளியிடப்பட்ட புத்தகங்களில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு புத்தகம் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. அவற்றுள் 5 புத்தகங்கள் இறுதிப் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பல சுற்று ஆலோசனைக்குப் பிறகு 2023-ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருதுக்கு பிரபாவா்மா எழுதிய ‘ரௌத்ர சாத்விகம்’ என்ற கவிதை நூல் உயா்நிலைக்குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்டது என அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விருது பெறுவோருக்கு ரூ.15 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருது தமிழ் எழுத்தாளா் சிவசங்கரிக்க வழங்கப்பட்டது.