தென் இந்தியாவின் உ.பி.யா, தமிழ்நாடு?

தென் இந்தியாவின் உ.பி.யா, தமிழ்நாடு?

அரசியலில் தென் இந்தியாவின் உத்தரப்பிரதேசம் தமிழ்நாடு என்கிறார் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்.
Published on

மக்களவைத் தேர்தல் என்றாலே போட்டியிடும் தேசியக் கட்சிகளின் இலக்கு 400 தொகுதிகளில் வெற்றி என்பதே. இந்த முறை பாஜகவின் இலக்கும் 400 இடங்கள் என்பதுதான். ஆனால், அக்கட்சி தனித்து 370 இடங்களை வெல்வது சாத்தியமில்லை என்று அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஏற்பாடு செய்த ஹைதராபாத் டயலாக்ஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜக தற்போது துருவ நிலையில் இருப்பதாகவும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை விட பாஜக சிறப்பாக செயல்படும் என்றும் அவர் கணித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருகை தருவது குறித்து கேட்டதற்கு, தென் மாநிலத்தில் பாஜக பெறும் வாக்கு எண்ணிக்கையை அது அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார்.

Q

பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடும் மற்ற கட்சிகளை விட பா.ஜ.க. பிரசாரப் போட்டியில் முன்னணியில் உள்ளது. எனவே 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை முன்கூட்டியே கணிக்க முடிகிறதா?

A

கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்யாத எதையும் அவர்கள் செய்ததாக நான் நினைக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி என்றென்றுமே பிரசாரத்தில்தான் இருக்கிறார். எனவே அந்த அளவிற்கு, நான் இதை ஒரு மிகப்பெரிய மாற்றமாக பார்க்கவில்லை. யார் வெல்வார்கள் என்பதைப் பற்றி கணிக்க என்னிடம் ஒரு ஸ்படிக கல்லும் இல்லை, ஆனால் ஒரு சில தகவல்களை யூகிக்க முடிகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிச்சயமாக அவர்களின் எதிரிகளை விட மிகப்பெரிய பலம் உள்ளது. அது தேர்தல் பிரசாரத்தை முன்கூட்டியே தொடங்கியதாலோ, பிரதமர் மோடியின் புகழாலோ அல்ல. மாறாக, அவர்களுக்கு மிகப்பெரிய தேர்தல் பலம் இருப்பதால் மட்டுமே என்கிறார்.

மேலும், எதிர்க்கட்சிகள் தங்கள் அணியில் உள்ள கட்சிகளை ஒன்றிணைக்க முடியவில்லை, நிச்சயமாக பாஜகவுக்கு ஒரு சவாலை ஏற்படுத்துவதற்கான சரியான பலத்துடன் இல்லை. ஜனநாயக நாட்டில், குறிப்பாக இந்தியா போன்ற ஒரு நாட்டில், எதிர்க்கட்சிக்கான அளவையோ, வாய்ப்பையோ குறைத்து மதிப்பிடக் கூடாது. பெரும்பான்மையான இந்தியர்கள் எப்பொழுதும் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகவே இருப்பார்கள்.

எந்த கட்சிக்கும் 40 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்காது. இது ஒரு தோராயமான மதிப்பீடு அல்ல. கடந்த 75 ஆண்டுகளின் தரவுகளைப் பாருங்கள். இந்தியாவில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளை யாராலும் பெற முடியவில்லை. அதாவது, வாக்களிக்கச் செல்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒரு கட்சியின் வேட்பாளர் யார், அவர்களது கொள்கைகள், வாக்குறுதிகள், சித்தாந்தங்களை எப்போதுமே நம்புவதில்லை.

எனவே, இந்தியாவில் ஒருபோதும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதாகக் கருதக் கூடாது. ஒரு நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ஒரு நாளைக்கு ரூ.100 கூட சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கும்போது, எதிர்க்கட்சிகளை குறைவாக மதிப்பிடக் கூடாது என்கிறார்.

Q

தக்காண பீடபூமியில் இருக்கிறீர்கள், பாஜகவின் தென்னக திட்டம் எந்த அளவில் இருக்கிறது என்று கூற முடியுமா?

A

பாஜகவுக்கு தெற்கே ஒரு சிறிய சறுக்கல் இருக்கிறது என்று சொல்லும் போக்குதான் உள்ளது. ஆனால் உண்மையில், அப்படியில்லை, கடந்த தேர்தலில், தெலங்கானாவில் 14 சதவீத வாக்குகளைப் பெற்று ஒரு மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளது பலருக்கும் தெரியவில்லை. அதுபோல ஆந்திரத்தில் சாமர்த்தியமான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது, கர்நாடகத்தி்லும் மாநில அரசை வழி நடத்தி வருகிறது.

Q

முதலாவதாக, தென்னிந்திய மாநிலங்களைப் பொறுத்தவரை பாஜகவை ஒரு "வடக்கு" கட்சியாகப் பார்க்கும் "எதிர்ப்பு" அரசியலைக் கொண்டிருப்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

A

இது மிகைப்படுத்துதல் என்று நினைக்கிறேன். பாஜகவின் அரசியல் பார்வையில் வடக்கு-தெற்கு என்ற பார்வை இருப்பதை ஒருபோதும் நான் ஏற்கவில்லை, ஏனென்றால் கர்நாடகத்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக, பாஜக ஆளும் கட்சியாகவோ அல்லது முக்கிய எதிர்க்கட்சியாகவோ இருந்து வருகிறது. எனவே இந்த கட்சிகளை வடக்கு-தெற்கு என இரண்டாகப் பிரிப்பதில் அர்த்தமில்லை.

பிகார், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரம், தெலங்கானா, தமிழகம், கேரளத்தில், கடந்த 2019ஐக் காட்டிலும் தற்போது பாஜக வளர்ந்து வருவதையே பார்க்க முடிகிறது. எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்று கணிக்க விரும்பவில்லை. ஆனால், ஒரு சில தொகுதிகளைக் கைப்பற்றும் என்று நிச்சயம் சொல்வேன். ஆனால், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர்களது வாக்கு விகிதம் அதிகரிக்கும் என்பதை சொல்லலாம்.

Q

பிரதமர் தமிழகத்திற்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகிறார். வடக்கு மற்றும் குஜராத்தில் பாஜகவின் செயல்திறனில் அவர் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதால்தான், அவர் தமிழகத்தின் மீது அதிக கவனம் செலுத்துகிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது. அதுபோல, அதிமுக - திமுகவின் சரிவுக்கு வித்திடுகிறாதா?

A

முதலாவதாக, கடந்த 30-40 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வந்த இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும், அவற்றின் மொத்த வாக்கு சதவீதம், இப்போது 70 சதவீதக்கும் கீழ் குறைந்து வருகிறது. மேலும் கடந்த 10-15 வருடங்களாக இதுதான் தொடகிறது. முதன்முறையாக, இது 65 அல்லது 60 சதவீதத்துக்குக் கீழே செல்வதை பார்க்கலாம். அதாவது மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான தமிழ் வாக்காளர்கள் சில மாற்றங்களை தேடுகிறார்கள் என்பதே அது.

Q

தமிழகத்தில் பாஜகவின் தேர்தல் நிலவரம் எப்படி இருக்கும்?

A

நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், தமிழகத்தில் பாஜக இரட்டை இலக்க வாக்கு விகிதத்தைப் பிடிக்கும் என்பதை நான் காணிக்கிறேன்.

தெலங்கானாவில் நாம் ஏற்கனவே சொன்னதைப்போல 14 சதவீத வாக்கு விகிதம் என்பது அரசியல் ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சிதான்.

எனவே தமிழகம் போன்ற ஒரு மாநிலத்தில், பாஜக இரட்டை இலக்க வாக்குப் பகிர்வுக்குள் நுழைந்தால், அவர்களுக்கு எந்த தொகுதியிலும் வெற்றி கிடைக்காவிட்டாலும்கூட, இந்த தேர்தலானது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஒடிசாவில் ஏற்கனவே முதலிடத்தில் உள்ளனர். மேற்கு வங்கத்தில், பெரும்பாலான மக்களிடம் பாஜக வரவேற்பை பெற்றுள்ளது. வரும் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளைப் பெறும் என்று கணிக்கிறேன். மேற்கு வங்கத்தில் இருந்து பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஒரு மிக ஆச்சரியமான முடிவுக்கு தயாராக இருங்கள் என்கிறார்.

தங்களது கட்சிக்கு எங்கெல்லாம் பலத்தைக் கூட்ட வேண்டும் என்பதை பாஜகவினர் நன்கு அறிந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த தேர்தலில் நேரத்தையும் சக்தியையும் முதலீடு செய்கிறார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் பிரதமர் தமிழகத்திற்கு மட்டும் எத்தனை முறை வருகை தந்துள்ளார் என்பதைப் பாருங்கள். அவர்களது திட்டத்தில் குஜராத்தை அடுத்து தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று நான் கருதுகிறேன், அண்மையில், மகாராஷ்டிரத்துக்கும் பிரதமர் மோடி அதிக முறை பயணம் செய்ததால், இப்போது தமிழ்நாடு மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது என்று சொல்கிறேன்.

எதிர்க்கட்சியின் பார்வையில், வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் அவர்களுக்கு பிரச்னை உள்ளது. மீதமிருப்பது 310 முதல் 320 தொகுதிகள். அதில் எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக ஒற்றை இலக்கத்தில்தான் வெற்றி வாய்ப்பைக் கொண்டுள்ளன. நான் எதிர்க்கட்சி என்று சொல்வது, காங்கிரஸ் மட்டுமல்ல, நான்கு கட்சிகள்.

காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி இங்கு 220 முதல் 250 இடங்களை கைப்பற்றி பாஜக முன்னிலை வகிக்கும். உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி கிட்டத்தட்ட 65-70 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேவேளையில் பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், பாஜகவை வீழ்த்தி 40 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இறுதியாக, மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சொல்லலாம்.

காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் அதனுடன் சிவசேனா ஆகிய கட்சிகள் பாஜகவுக்கு எதிராக குறைந்தபட்சம் 25-30 சதவீதம் வரை தங்கள் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யாதவரை இந்திய அளவில் பாஜகவை தோற்கடிக்க முடியாது என்றார்.

Q

தமிழகத்தில் பாஜக ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது?

A

திமுக அல்லது அதிமுக சரிந்துவிட்டதால் அது நடக்கவில்லை. ஏனென்றால், உ.பி., பிகாரில் வெற்றி பெறாத வரை, வடக்கின் அரசியலில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பது போல, ஆந்திரத்திலும், தமிழ்நாட்டிலும் பெரிய சக்தியாக மாறாத வரை, தெற்கின் அரசியலில் ஆதிக்கம் செலுத்த முடியாது.

தமிழகம் தெற்கின் உ.பி. அதுபோல கர்நாடகத்தில் 15, 20 ஆண்டுகளாக பாஜக வெற்றி பெற்று வருகிறது. ஆனால், இன்னமும், நீங்கள் பாஜக வடமாநில கட்சி என்று அழைப்பீர்களா? கர்நாடகம் தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாநிலம், ஆனாலும், தென்னகத்தின் நரம்பு மண்டலம் போன்றது தமிழ்நாடு.

எனவே அவர்கள், அரசியல் யதார்த்தங்களை நன்கு அறிந்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தமிழகத்தில் அவர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஒரு மாநிலத்தில் அவர்களது வாக்கு வங்கி 2 முதல் 4 சதவீதம்தான் என்றாலும், நீண்ட கால திட்டமாக அவர்கள் அரசியல் செய்கிறார்கள். இதனை முதலீடாகவே கருத வேண்டும். அவர்கள் தொடர்ந்து அரசியல் செய்தால், ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள், பிகார், உ.பி.யில் வெற்றி பெறுவார்கள். அவர்கள் அதனை முழுமையாக்க வேண்டும். அது ஆந்திரம் மற்றும் தமிழகத்தில் காலூன்றினால்மட்டுமே முடியும். அதனால்தான் இந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com