தில்லி கலால் கொள்கையில் நடந்த மோசடியில் குற்றம்சாட்டப்பட்டு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் பாரத ராஷ்டிர சமிதி தலைவர் கவிதாவுக்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், தெலங்கானாவின் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சித் தலைவா் சந்திரசேகா் ராவின் மகளும் கட்சி எம்எல்சி-யுமான கே.கவிதாவை அமலாக்கத் துறையினா் ஹைதராபாதில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதனைத் தொடர்ந்து, கவிதாவை மார்ச் 23ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு ரூ.100 கோடி தொகையை சட்டவிரோதமாக வழங்கியதாக வழக்கு விசாரணை நடைபெறும் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், தில்லி கலால் கொள்கை வழக்கில் கவிதாவுக்கு முக்கிய தொடர்பிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது அமலாக்கத்துறை.
தில்லி, ஹைதராபாத், சென்னை, மும்பை உள்பட நாடு முழுவதும் 245 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது, வழக்கில் இதுவரை ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயர் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 128.79 கோடி சொத்துக்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துஐற தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தில்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கவிதா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தான் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தன் மீது வேண்டுமென்றே புனையப்பட்டுள்ள வழக்கு இது என்றும் கவிதா தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கவிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்த போது, கவிதா தரப்பில், மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தை நாடவும், இதுதான் நீதிமன்ற நடைமுறை எனவும், இதனை மீற முடியாது என்றும் தெரிவித்துவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.