பாஜக 370 தொகுதிகளில் வெல்ல தென் மாநிலங்கள் உதவும்: கட்கரி நம்பிக்கை

பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கை எட்ட தென் மாநிலங்கள் உதவும் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜக 370 தொகுதிகளில் வெல்ல தென் மாநிலங்கள் உதவும்: கட்கரி நம்பிக்கை
-

மக்களவைத் தேர்தலில் பாஜக 370 இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கை எட்ட தென் மாநிலங்கள் உதவும் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பாக மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள தனது இல்லத்தில் அவர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டி வெற்றி பெறும் என்பதிலும் மூன்றாவது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்பார் என்பதிலும் எனக்குச் சந்தேகமே இல்லை. ஏனெனில் மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட பணிகள் தேர்தலில் வெற்றியைத் தேடித் தரும்.

எதிர்க்கட்சிகள் பலவீனப்படுத்துகிறோமா?

எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளை மோடி அரசு ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன். மக்களின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலம் பாஜகவின் அரசியல் எதிரிகள் சவாலைச் சமாளிக்க முயற்சி எடுக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளை வலுப்படுத்துவதும் பலவீனப்படுத்துவதும் எங்கள் பொறுப்பா? பாஜக வெறும் இரண்டு எம்.பி.க்களை மட்டும் கொண்டு பலவீனமாக இருந்தபோது அனுதாபம் காரணமாக நாங்கள் எந்த ஆதாயத்தையும் பெற்றதில்லை.

கட்சித் தொண்டர்களின் கடுமையான உழைப்பு காரணமாகவே பாஜக வலுவடைந்துள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெற எதிர்க்கட்சிகளும் முயற்சிக்க வேண்டும்.

தென் மாநிலங்கள் உதவும்

மக்களவைத் தேர்தலில் பாஜக 370 இடங்களையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களையும் கைப்பற்றும். பாஜக 370 இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் இலக்கை எட்ட தென் மாநிலங்கள் உதவும்.

இதனை விளக்க மாநிலம் வாரியான ஆய்வே தேவை இல்லை. இந்த முறை நாங்கள் தென் மாநிலங்களில் கணிசமான வெற்றியைப் பெறுவோம்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் தென் மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்டுள்ள பணிகள் எங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்.

மோடி மீது நம்பிக்கை

தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் நாங்கள் தீவிரமாகப் பணியாற்றியுள்ளோம். கடந்த காலங்களில் இந்த மாநிலங்களில் குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றோம். இந்த முறை நாங்கள் தெலங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறப்பான வெற்றியைப் பெறுவோம்.

நாட்டு மக்கள் வளர்ச்சியைக் காண விரும்புகின்றனர். அவர்கள் மோடியின் தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அது தேர்தல்களில் பிரதிபலிக்கும்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது என்று சில தரப்பினர் கூறுவது நடக்கவே நடக்காது. பாஜக பெரும்பான்மை பலம் பெறுவது உறுதி.

ஆர்எஸ்எஸ் அமைப்பு அடுத்த ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாட உள்ளது குறித்து எனது தனிப்பட்ட செயல்திட்டம் என்ன என்று கேட்கிறீர்கள்.

எனக்கு அது தொடர்பாக தனிப்பட்ட செயல்திட்டம் ஏதுமில்லை. ஆர்எஸ்எஸ் தனது செயல்திட்டம் குறித்து தெரிவிக்கும்.

பாஜகவுக்கு அதிக நன்கொடை ஏன்?

தொலைக்காட்சி ஊடகத்தில் அதிக டிஆர்பி விகிதத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு அதிக விளம்பர வருவாய் கிடைக்கும். டிஆர்பி விகிதம் குறைவாக இருக்கும் சேனல்களுக்கு விளம்பர வருவாய் குறைவாக இருக்கும்.

அதேபோன்று நாங்கள் (பாஜக) இன்று ஆளுங்கட்சியாக இருப்பதால் அதிக அளவில் நன்கொடை கிடைக்கிறது. நாளை வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் அக்கட்சிக்கு அதிக நன்கொடை கிடைக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com