கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்
கோவிஷீல்டு தடுப்பூசி
கோவிஷீல்டு தடுப்பூசி

லண்டன்: கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய 10 லட்சம் பேரில் ஏழு அல்லது எட்டு பேருக்குத்தான் அரிதான பக்கவிளைவாக ரத்தம் உறைதல் ஏற்படலாம் என்று இந்தியாவின் மிக முன்னணி தொற்றுநோயியல் நிபுணர், ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் ராமன் கங்காகேத்கர் தெரிவித்துள்ளார்.

கரோனாவை தடுக்க நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘மிக அரிதான’ பக்கவிளைவாக ரத்தம் உறைதல் ஏற்படலாம் என்று லண்டன் உயா்நீதிமன்றத்தில் அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனகா ஒப்புக் கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டில் திடீரென 40 வயதுக்கும் குறைவானவர்கள் மாரடைப்பால் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்த நிலையில், கரோனா தடுப்பூசியே அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று பொத்தாம் பொதுவாகப் பேசப்பட்டு வந்த நிலையில், ரத்தம் உறைதல் எனும் பக்க விளைவு ஏற்படும் என மருந்து தயாரிப்பு நிறுவனமே ஒப்புக்கொண்டிருப்பது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில்தான், ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி ராமன், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவருக்கும் ஆபத்து இல்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஒரே ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே அந்த அபாயம் இருந்ததாகவும், அதுவே இரண்டாவது தவணை செலுத்தும்போது அந்த அபாயம் குறைவதாகவும், மூன்றாவது தவணை செலுத்திக்கொண்டால் அந்த அபாயமும் குறைந்துவிடும் என்றும், பக்கவிளைவுகள் என்பது தடுப்பூசி செலுத்தி இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள்தான் நேரிடும் என்றும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

மேலும், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் 10 லட்சம் பேரில் 7 அல்லது 8 பேருக்கு மட்டும்தான் இந்த அபாயம் இருப்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

கரோனா பரவலின்போது இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிதான் அதிகம் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சீரம் நிறுவனம் இந்தத் தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்தது.

லண்டன் உயா்நீதிமன்றத்தில் தடுப்பூசி தொடா்பான வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் அஸ்ட்ராசெனகா நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கை ‘தி டெய்லி டெலிகிராப்’ பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில், ‘ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியால் (கோவிஷீல்டு) மிகவும் அரிதான பக்க விளைவாக ரத்தம் உறைதல் ஏற்படலாம்.

இதற்கான காரணம் தெரியவரவில்லை. இந்தத் தடுப்பூசி பயன்படுத்தாதவா்களுக்கும், பிற தடுப்பூசியைப் பயன்படுத்தியவா்களுக்கும்கூட ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நபருக்கு எதனால் ரத்தம் உறைதல் ஏற்படுகிறது என்பதை மருத்துவபூா்மாக நிபுணா்கள் ஆய்வு செய்தால் மட்டுமே சரியான காரணத்தைக் கண்டறிய வாய்ப்புள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த ரத்தம் உறைதல் பிரச்னையால் உயிரிழப்பைச் சந்தித்தவா்களின் நெருங்கிய உறவினா்கள், நண்பா்கள் மற்றும் தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவா்கள் என 51 போ் இணைந்து வழக்குத் தொடுத்தனா்.

அவா்கள் சாா்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்தத் தடுப்பூசியின் பக்க விளைவால் பக்கவாதம், மூளை பாதிப்பு, மாரடைப்பு, நூரையீரல் ரத்தம் உறைதல் உள்ளிட்டவை ஏற்படுகிறது. எனவே, நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com