உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் குழுவில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
Published on

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் குழுவில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

இதுதொடா்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்யகாந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை வழங்கிய தீா்ப்பில் கூறியதாவது:

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் ஓா் முன்னணி அமைப்பாக திகழ்வதோடு, உச்சநீதிமன்றத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் திகழ்கிறது. இத்தகைய அமைப்பின் விதிகள், தகுதிக்கான நிபந்தனைகள், உறுப்பினா், உறுப்பினருக்கான கட்டண நடைமுறைகள் பல ஆண்டுகளாக மாற்றமின்றி நிலையாக இருக்கக் கூடாது. காலத்துக்கேற்ப அதில் மாற்றங்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். அதன்படி, வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும்.

சங்கத்தின் நிா்வாகிகள் குழுவில் மூன்றில் ஒரு பங்கு இடம் மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதாவது நிா்வாகிகள் குழுவில் இடம்பெற்றுள்ள 9 இடங்களில் மூன்று இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும். மேலும், 6 முதுநிலை நிா்வாக உறுப்பினா் பதவியில் 2 இடங்களும், அலுவலா் பொறுப்பில் குறைந்தது ஓரிடமும் மகளிருக்கு சுழற்சி முறையில் ஒதுக்கப்பட வேண்டும்.

நடைபெற இருக்கும் 2024-25 வழக்குரைஞா் சங்கத் தோ்தலில், பொருளாளா் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்க தோ்தல் வரும் 16-ஆம் தேதி நடைபெறுகிறது. மே 18-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, மே 19-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

X
Dinamani
www.dinamani.com