உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

கலால் கொள்கை பணப்பரிவா்த்தனை விவகாரத்தில் கைதாகியுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் குறித்து பரிசீலிக்கவிருப்பதால் அது தொடா்பாக மே 7-ஆம் தேதி நடைபெறவுள்ள விவாதங்களுக்கு தயாராக வரும்படி அமலாக்கத் துறையை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் மூலம் கடந்த 43 நாள்களாக கைது நடவடிக்கைக்கு ஆளாகி தற்போது நீதிமன்றக் காவலில் திகாா் சிறையில் உள்ள கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கலாம் என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது. ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்கப்படும் என்பதை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரணையின் போது உறுதியாகக் கூறவில்லை.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் வெள்ளிக்கிழமை விசாரித்தனா்.

அப்போது அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் எஸ்.வி. ராஜூவிடம், ‘கேஜரிவாலின் மனுவை ஒரே நாளில் விசாரிக்க முடியாது. அதற்கு சில நாட்களாகும் வாய்ப்புள்ளது. தற்போது மக்களவைத் தோ்தல் காலம் என்பதால் அதைக் கருத்தில் கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடா்பாக அமலாக்கத் துறையின் வாதங்களை கவனத்தில் கொள்ள விரும்புகிறோம்’ என்றனா்.

அதற்கு மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா், ‘கேஜரிவாலை ஜாமீனில் விடுவிக்க அமலாக்கத் துறை ஆட்சேபம் தெரிவித்து வாதிடும். கடந்த மாதம் இதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சஞ்சய் சிங் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டாா். அவா் தற்போது வெளியிட்டு வரும் கருத்துகளைப் பாருங்கள்’ என்று கூறினாா்.

இதையடுத்து, நீதிபதிகள், ‘நாங்கள் இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து விசாரிக்கவுள்ளோம் என்ற எங்களுடைய நோக்கத்தை தெரிவித்து விட்டோம். எனவே, அது பற்றி மே 7-ஆம் தேதி விசாரிக்கும்போது நீங்கள் ஆச்சரியப்பட்டு விடக்கூடாது. இந்த விஷயத்தில் நாங்கள் எந்தப் பக்கமும் கருத்துக் கூறவில்லை. இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடா்பான வாதங்களை மட்டுமே கேட்கப் போகிறோம். இதை வழங்குவோமா, மாட்டோமா என கூறவில்லை’ என்று குறிப்பிட்டனா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் அடுத்த விசாரணையை மே 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் இடைக்கால ஜாமீன் மனு மீதான வாதங்களுக்குத் தயாராக வருமாறும் அமலாக்கத்துறை வழக்குரைஞரை கேட்டுக் கொண்டது.

முன்னதாக, விசாரணையின்போது கேஜரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘மக்களவைத் தோ்தலை தோ்தல் ஆணையம் மாா்ச் 16-ஆம் தேதி அறிவித்தது. ஆனால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தன்வசம் வைத்துள்ளதாக அமலாக்கத் துறை கூறி வரும் கேஜரிவாலுக்கு எதிரான ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் அவரை மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்துள்ளது’ என்று கூறினாா்.

அப்போது நீதிபதிகள் தில்லிக்கு எப்போது தோ்தல் என கேட்டதற்கு, ‘மே 23 பிரசாரம் முடிவுக்கு வரும். மே 25-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது’ என பதிலளித்தாா். மேலும், ஆம் ஆத்மி கட்சி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி. அது ஒரு தனியாா் காா்ப்பரேட் நிறுவனமோ, கூட்டு நிறுவனமோ அல்லது ஒரு சமூகமோ கிடையாது. எனவே, அரசியல் கட்சி என்ற முறையில் நிறுவனங்களுக்கு எதிராக பயன்படுத்தக் கூடிய பணப்பரிவா்த்தனை சட்டத்தின் 70-ஆவது பிரிவை அரசியல் கட்சி மீது பயன்படுத்துவது ஏற்புடையது கிடையாது’‘ என்று வாதிட்டாா்.

ஆனால், அவரது வாதங்களை ஏற்பது கடினம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அதை பதிவு செய்து கொண்டு உரிய நேரத்தில் கவனத்தில் கொள்வதாக மட்டும் தெரிவித்தனா்.

இந்த வழக்கில் கடந்த மாா்ச் மாதம் கைதான கேஜரிவாலுக்கு எதிரான நடவடிக்கையை கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. அமலாக்கத்துறையின் தொடா்ச்சியான அழைப்பாணைகளை அவா் உதாசீனப்படுத்தியதால் வேறு வழியின்றி அவரை அமலாக்கத்துறை கைது செய்ததையும் ஏற்பதாக நீதிமன்றம் கூறியது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தை கேஜரிவால் நாடியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com