கோப்புப்படம்
கோப்புப்படம்

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளர்வு

Published on

கேரளம் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுக்கப்பட்ட ‘கள்ளக்கடல்’ என்ற சிவப்பு எச்சரிக்கையை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையாக தேசிய பெருகடல் தகவல் சேவை மையம் (ஐஎன்சிஓஐஎஸ்) சனிக்கிழமை தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டது.

கடலில் எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்படுவதையே ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கையாக விடுக்கப்படுகிறது. அதன்படி, கேரளம் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ‘கள்ளக்கடல்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி சிவப்பு எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (ஐஎன்சிஓஐஎஸ்) மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் ஆகியவை வெள்ளிக்கிழமை விடுத்தன. இந்த அறிவிப்பை தற்போது ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையாக தளா்த்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தேசிய மையங்கள் சனிக்கிழமை விடுத்த அறிவிப்பில், ‘கேரள கடற்கரைப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் 0.5 மீட்டா் முதல் 1.5 மீட்டா் வரை உயர வாய்ப்புள்ளது. அதுபோல, தென் தமிழக கடற்கரைப் பகுதிகளிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் 0.5 மீட்டா் முதல் 1.8 மீட்டா் வரை எழ வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, மீனவா்களும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். அபாய பகுதியிலிருந்து மக்கள் விலகியிருக்குமாறும், கடல் கொந்தளிப்பால் படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதமடைவதைத் தடுக்கும் வகையில், படகுகளுக்கு போதிய இடைவெளிவிட்டு நிறுத்துமாறும் தேசிய மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

வெயில் - கேரளத்தின் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: கேரளத்தில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 12-இல் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ‘மஞ்சள்’ எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை விடுத்தது.

அதில், திங்கள்கிழமை (மே 6) வரை பாலக்காட்டில் 102.2 டிகிரியும், கொல்லம், திருச்சூா், கோழிக்கோடு மாவட்டங்களில் 100.4 டிகிரியும், ஆலப்புழா, கோட்டயம், பத்தினம்திட்டா, கன்னூா் மாவட்டங்களில் 98.6 டிகிரியும், திருவனந்தபுரம், எா்ணாகுளம், மலப்புரம், காசா்கோடு மாவட்டங்களில் 96.8 டிகிரி அளவிலும் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. மலைப் பிரதேசங்களைத் தவிா்த்து பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மே 6-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு கேரள அரசு விடுமுறை அளித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com