
சென்னை: தமிழகம், கேரளம் உள்பட அரபிக் கடலோரப் பகுதிகளில் இன்று அதீத அலை ஏற்படும் அபாயம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதீத அலை என்பது, காற்றின் அதிவேகத்தால் ஏற்படக்கூடியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கள்ளக்கடல் என்று அழைக்கப்படும் அதீத அலை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், மே 4 மற்றும் 5ம் தேதிகளில் இது நேரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி கடலோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை இரவு வரை தென் மாவட்டங்களில் 0.5 - 1. 5 அடிக்கு அலைகள் எழலாம் என்றும், முதல் முறையாக இதுபோன்றதொரு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மும்பை கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் அலைகள் 1.5 மீட்டர் அளவுக்கு எழலாம் என்றும் மக்கள் கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மீனவர்கள் படகுகளை கடற்கரையிலிருந்து தொலைவில் நிறுத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடற்கரைகளில் உறங்குவோருக்கு எச்சரிக்கை விடுக்குமாறு காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரங்களில் வியாபாரம் செய்யும் வணிகர்கள் பாதுகாப்பாக கடற்கரையோரத்திலிருந்து சற்று தொலைவில் உடைமைகளை பாதுகாப்பாக வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை கடற்பகுதிக்கும் இந்த அதீத அலைக்கான அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை, கடலூர் உள்ளிட்ட மாஅனவட்ட கடலோரப் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும், தென் தமிழகம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் ஸ்வெல் சர்ஜ் எனப்படும் அதீத அலை எழும் அபாயம் இருப்பதாகவும், மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.