உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

உச்ச நீதிமன்றத்தில் இன்று மருத்துவக் கழகத்துக்கு கண்டனம்
'ராஜீவ் குற்றவாளிகளை விடுவித்தது போல.. என்னை விடுவியுங்கள்' உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு
'ராஜீவ் குற்றவாளிகளை விடுவித்தது போல.. என்னை விடுவியுங்கள்' உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு

தவறான விளம்பரங்களை வெளியிட்ட வழக்கில் பதஞ்சலி நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்து வந்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணை தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தலைவர் ஆர்.வி. அசோகன் பேசியிருப்பதற்கு காட்டமான கருத்துகளை வெளியிட்டுள்ளது.

ஆர்.வி. அசோகன் அளித்த பேட்டிக்கு எதிராக பதஞ்சலி நிறுவனம் தாக்கல் செய்த மனுவை செவ்வாயன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், "மிக மிக ஏற்றுக்கொள்ளமுடியாதது" என்று குறிப்பிட்டது. மேலும், இது குறித்து அசோகன் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மே 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பாபா ராம்தேவ் விவகாரம் தொடா்பாக இந்திய மருத்துவ சங்க தலைவா் ஆா்.வி.அசோகன் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘பதஞ்சலி நிறுவனம் மீதான வழக்கு விசாரணையின்போது இந்திய மருத்துவ சங்கத்தையும், மருத்துவா்களின் சிகிச்சை முறைகள் குறித்தும் உச்ச நீதிமன்றம் விமா்சித்தது துரதிருஷ்டவசமானது. விவரங்களை ஆராயாமல் குறைந்த தகவல்களுடன் தெளிவற்ற கருத்துகளை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது மருத்துவா்களின் நம்பிக்கையை குலைத்துள்ளது. தங்கள் முன் என்ன வழக்கு விசாரணையில் உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் பாா்க்க வேண்டும். இந்த விவகாரம் மருத்துவா்களின் சிகிச்சை முறை தொடா்பானது அல்ல என்பதை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை’ என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து பதஞ்சலி நிறுவனம் சார்பில் இந்திய மருத்துவக் கழகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுபற்றி எனக்குத் தெரியாது என்று நீங்கள் சொல்ல முடியாது என இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் கூறியது.

வழக்கின் பின்னணி

மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி, கரோனா தடுப்பூசி திட்டம் ஆகியவை குறித்து பதஞ்சலி இணை நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் தவறான கருத்துகளைத் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் மருந்துகள் குறித்து தவறான விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டதாக தெரிகிறது. இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் வழக்கு தொடுத்தது.

இதைத்தொடா்ந்து எந்தவொரு மருத்துவ முறைக்கும் எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது, மருந்துகள் குறித்து தவறான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், அலோபதி மருத்துவ முறைக்கு எதிராக பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் தொடா்ந்து வெளியிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து பாபா ராம்தேவ், பதஞ்சலி ஆயுா்வேத நிறுவன நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பின்னா், உச்சநீதிமன்றத்தில் இருவரும் மன்னிப்பு கோரினா். ஆனால் அதை ஏற்காத உச்சநீதிமன்றம், நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனத்தின் பொது மன்னிப்பை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதைத்தொடா்ந்து 67 நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனத்தின் பொது மன்னிப்பு வெளியிடப்பட்டதாக அந்த நிறுவனம் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி தெரிவித்தாா். ஆனால் நாளிதழ்களில் வெளியிடப்படும் பதஞ்சலி நிறுவன விளம்பரங்களைப் போல பெரிதாக இல்லாமல், சிறிய அளவில் பொது மன்னிப்பு வெளியிடப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. அதன் பின்னா், நாளிதழ்களில் முன்பைவிட பெரிய அளவில் பதஞ்சலி நிறுவனம் நிபந்தனையற்ற பொது மன்னிப்பை வெளியிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல் முறையுடன் ஒப்பிடுகையில், நாளிதழ்களில் இரண்டாவது முறை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட பொது மன்னிப்புக்கு நீதிபதிகள் திருப்தி தெரிவித்தனா்.

அப்போதே, அசோகனின் கருத்துகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோரின் கவனத்துக்கு பாபா ராம்தேவ் தரப்பு வழக்குரைஞா் ரோத்தகி கொண்டுவந்திருந்தது குறிப்பிடதத்க்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com