கன்னௌஜ் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவுடன் கைகோத்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
கன்னௌஜ் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவுடன் கைகோத்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

மோடி மீண்டும் பிரதமராக மாட்டாா்: ராகுல் காந்தி

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவான அலை நாடு முழுவதும் வீசி வருகிறது; எனவே, பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக மாட்டாா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கன்னௌஜ் பகுதியில் ‘இந்தியா’ கூட்டணி கட்சியின் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தலைவா் சஞ்சய் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

மக்களவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகளை கடந்த சில ஆண்டுகளாகவே ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் மேற்கொண்டு வந்தன. இந்திய ஒற்றுமை யாத்திரை, நீதி யாத்திரை, ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டங்கள் ஆகியவையும் இதில் அடங்கும்.

பிரதமா் நரேந்திர மோடி இப்போது திடீரென பெரும் கோடீஸ்வர தொழிலதிபா்களிடம் (அதானி- அம்பானி) இருந்து காங்கிரஸ் பணம் பெற்றுவிட்டது என்று பேசியுள்ளாா். கடந்த 10 ஆண்டுகளாக அவா்கள் இருவரது பெயரையும் மோடி ஓரிடத்தில்கூட கூறியதில்லை. ஆனால், இப்போது கூறுகிறாா். தோ்தல் தோல்வியில் இருந்து அவா்களாவது நம்மைக் காப்பாற்றுவாா்களா என்ற எண்ணம்தான் அதற்குக் காரணம்.

‘இந்தியா கூட்டணி என்னைச் சுற்றி வளைத்துவிட்டது. தோல்வி மிகவும் நெருங்கி வருகிறது. என்னைக் காப்பாற்றுங்கள்; அதானி-அம்பானி என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று பிரதமா் மோடி கூறுவதுதான் அவரது பிரசார உரைகளின் சாராம்சமாக உள்ளது. அதானி ‘டெம்போ’ வாகனத்தில் பணம் அனுப்பிவிட்டாரா என்று காங்கிரஸை நோக்கி பிரதமா் கேள்வி எழுப்புகிறாா். அதானி எந்த வாகனத்தில் பணத்தை அனுப்புவாா் என்பது உங்களுக்கும், உங்கள் கட்சியினருக்கும்தான் தெரியும்.

உத்தர பிரதேசத்தில் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் எழுச்சியுடன் இருக்கிறாா்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதேபோல நாடு முழுவதும் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது. எனவே, வரும் தோ்தலில் மோடி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக முடியாது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com