3-ஆம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு விவரம் வெளியீடு

3-ஆம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு விவரம் வெளியீடு
படம் | பி.டி.ஐ

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வரும் நிலையில், 3-ஆம் கட்டமாக கடந்த செவ்வாயன்று(மே. 7), 93 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்டது.

மக்களவை 3-ஆம் கட்ட தேர்தலையொட்டி, குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 7) வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 64.40 சதவீத வாக்குகள் பதிவானதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

மூன்றாம் கட்டமாக குஜராத்தில் 25, கர்நாடகத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மத்திய பிரதேசத்தில் 9, சத்தீஸ்கரில் 7, பிகாரில் 5, அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் தலா 4, கோவாவில் 2, தாத்ரா-நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில் 2 என மொத்தம் 93 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

முன்னதாக குஜராத்தில் உள்ள தாஹோத் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மகிசாகர் மாவட்டத்தில் சாந்த்ராம்பூர் தாலுகாவில் உள்ள பார்த்தம்பூர் வாக்குச்சாவடியில் கடந்த செவ்வாயன்று (மே. 7) நடந்த வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார் எழுந்தது. கடந்த மே 7ஆம் தேதி ஒருவர் வாக்களிக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் நேரடியாக வெளியாகி வைரலானது.

இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையின்படி, வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி, உதவி தலைமைத் தேர்தல் அதிகாரி, 2 வாக்குச் சாவடி அலுவலர்கள் மற்றும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக குஜராத் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது.

குஜராத்தில் உள்ள தாஹோத் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடியில் மே 11ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், மறு வாக்குப்பதிவுக்கு பின், ஒட்டுமொத்தமாக 93 மக்களவை தொகுதிகளிலும் பதிவான துல்லியமான வாக்குப்பதிவு விவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மே. 11) வெளியிட்டுள்ளது.

3-ஆம் கட்ட வாக்குப்பதிவில், ஆண் வாக்காளர்கள் 66.89 சதவிகிதமும், பெண் வாக்காளர்கள் 64.41 சதவிகிதமும், மூன்றாம் பாலினத்தவர்கள் 25.2 சதவிகிதமும் வாக்களித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 65.68 சதவிகிதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச, குறைந்தபட்ச வாக்குப்பதிவுகள்: அஸ்ஸாமில் அதிகபட்சமாக 81.61 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 75.79 சதவீதமும், கோவாவில் 75.20 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. உத்தர பிரதேசத்தில் குறைந்த அளவாக 57.34 சதவீத வாக்குகளே பதிவாகின. குஜராத்தில் சுமார் 58.98 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-

முன்னதாக, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டத்தில் 66.14 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.இரண்டாம் கட்டத்தில் 66.71 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

செவ்வாய்க்கிழமை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்தகட்ட தேர்தல்கள் நடைபெறவுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com