
ரே பரேலி தொகுதியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி லட்சங்களில் செலவு செய்து ஆடை அணிவது குறித்து விமர்சித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, “70 கோடி மக்களின் பணத்தை 22 பேர் மட்டுமே உடைமையாக வைத்துள்ளனர். அவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மோடி ஒரு நாளில் மூன்று முறை கோட் – சூட்டை மாற்றுகிறார். ஒரு மாதத்துக்கு 90 முறை. ஒரு கோட்டின் விலை 50 ஆயிரம், 70 ஆயிரம், ஒரு லட்சம் ரூபாய். மூன்று முறை மாற்றி மாற்றி அணிகிறார். பிரதமரின் சம்பளம் ஒன்றரை லட்சம்தான். இவற்றையெல்லாம் இவருக்கு யார் வாங்கித் தருகிறார்கள்? காலணிகளை யார் வாங்கித் தருகிறார்கள்? இவற்றை ஊடகங்கள் கேட்காதா? ஒருபோதும் கேட்காது” என பேசியுள்ளார்.
மேலும் நாட்டில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசிய ராகுல், “நான் விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோரிடம் இந்த நாட்டில் என்ன பிரச்னையுள்ளது எனக் கேட்டேன். எனக்கு மூன்று விடைகள் கிடைத்தன- இளைஞர்கள் வேலையின்மையை தெரிவித்தார்கள், விவசாயிகள் விளைபொருள்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்கிறார்கள், தொழிலாளர்களுக்கு போதிய பணம் கிடைப்பதில்லை. நாங்கள் கோடி பேரை லட்சாதிபதிகளாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். வறுமையில் உள்ளவர்களை பட்டியலிட்டு ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சம் தரவுள்ளோம். ஜுலை 1-ம் தேதி காலை கோடிக்கணக்கான பேர் இந்த பணத்தை பெறுவார்கள். ஒவ்வொரு மாதமும் இது தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். மே 20-ம் தேதி ரே பரேலியில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.