
உத்தரகண்ட் மாநில அரசால் தடை செய்யப்பட்ட பதஞ்சலியின் 14 மருந்துகளின் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி, கரோனா தடுப்பூசி குறித்து தவறான விளம்பரங்களை வெளியிட்ட வழக்கில் பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ், நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோர் உச்சநீதிமன்ற விசாரணைக்கு இன்று ஆஜராகினர்.
தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பத்திரிகைகளில் மன்னிப்பு கோரி வெளியிட்ட விளம்பரங்களை சரிபார்த்த நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் தடை செய்யப்பட்ட பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகள் விற்பனை நிறுத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், தடை செய்யப்பட்ட மருந்துகளின் கையிறுப்பு அகற்றப்பட்டுவிட்டதா உள்ளிட்டவை குறித்து 3 வாரங்களில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, பதஞ்சலி வழக்கு விசாரணை தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தலைவர் ஆர்.வி. அசோகன் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி தொடர்பான விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது, உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான அசோகன், நீதிபதிகளிடம் மன்னிப்பு கோரினார். ஆனால், அவரது மன்னிப்பை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
அசோகனின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், “பதஞ்சலி செய்ததைதான் நீங்களும் செய்கிறீர்கள், விளைவுகள் தெரியாமல் பேச நீங்கள் சாமானியர் கிடையாது, மருத்துவ சங்கத் தலைவர் என்ற முறையில் உங்கள் பேச்சில் கட்டுப்பாடு இருந்திருக்க வேண்டும், ஆனால் உங்கள் பேட்டியில் நாங்கள் அதனை பார்க்கவில்லை.” எனத் தெரிவித்தனர்.
வழக்கின் பின்னணி
மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி, கரோனா தடுப்பூசி திட்டம் ஆகியவை குறித்து பதஞ்சலி இணை நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் தவறான கருத்துகளைத் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் மருந்துகள் குறித்து தவறான விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டதாக தெரிகிறது. இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் வழக்கு தொடுத்தது.
இதைத்தொடா்ந்து எந்தவொரு மருத்துவ முறைக்கும் எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது, மருந்துகள் குறித்து தவறான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், அலோபதி மருத்துவ முறைக்கு எதிராக பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் தொடா்ந்து வெளியிட்டது.
இதையடுத்து பாபா ராம்தேவ், பதஞ்சலி ஆயுா்வேத நிறுவன நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பின்னா், உச்சநீதிமன்றத்தில் இருவரும் மன்னிப்பு கோரினா். ஆனால் அதை ஏற்காத உச்சநீதிமன்றம், நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனத்தின் பொது மன்னிப்பை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதைத்தொடா்ந்து 67 நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனத்தின் பொது மன்னிப்பு வெளியிடப்பட்டதாக அந்த நிறுவனம் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி தெரிவித்தாா். ஆனால் நாளிதழ்களில் வெளியிடப்படும் பதஞ்சலி நிறுவன விளம்பரங்களைப் போல பெரிதாக இல்லாமல், சிறிய அளவில் பொது மன்னிப்பு வெளியிடப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. அதன் பின்னா், நாளிதழ்களில் முன்பைவிட பெரிய அளவில் பதஞ்சலி நிறுவனம் நிபந்தனையற்ற பொது மன்னிப்பை வெளியிட்டது.
இதற்கிடையே பாபா ராம்தேவ் விவகாரம் தொடா்பாக இந்திய மருத்துவ சங்க தலைவா் ஆா்.வி.அசோகன் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘பதஞ்சலி நிறுவனம் மீதான வழக்கு விசாரணையின்போது இந்திய மருத்துவ சங்கத்தையும், மருத்துவா்களின் சிகிச்சை முறைகள் குறித்தும் உச்ச நீதிமன்றம் விமா்சித்தது துரதிருஷ்டவசமானது. விவரங்களை ஆராயாமல் குறைந்த தகவல்களுடன் தெளிவற்ற கருத்துகளை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது மருத்துவா்களின் நம்பிக்கையை குலைத்துள்ளது. தங்கள் முன் என்ன வழக்கு விசாரணையில் உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் பாா்க்க வேண்டும். இந்த விவகாரம் மருத்துவா்களின் சிகிச்சை முறை தொடா்பானது அல்ல என்பதை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை’ என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து பதஞ்சலி நிறுவனம் சார்பில் இந்திய மருத்துவக் கழகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுபற்றி எனக்குத் தெரியாது என்று நீங்கள் சொல்ல முடியாது என இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் கடந்த முறை விசாரணையின்போது கூறியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.