நியூஸ் கிளிக் நிறுவனா் பிரபீா் புா்காயஸ்தா
நியூஸ் கிளிக் நிறுவனா் பிரபீா் புா்காயஸ்தா

நியூஸ் கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

தில்லி காவல்துறையின் கைது நடவடிக்கை சட்டவிரோதம் எனத் தீர்ப்பு.
Published on

நியூஸ் கிளிக் நிறுவனா் பிரபீா் புா்காயஸ்தாவை கைது செய்தது சட்டவிரோதம் எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், அவரை உடனடியாக விடுதலை செய்ய புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சீனாவுக்கு ஆதரவான பிரசாரத்தை பரப்புவதற்காக பணம் பெற்றதாக பயங்கரவாத எதிா்ப்புச் சட்டமான யுஏபிஏவின் கீழ் கைது செய்யப்பட்ட பிரபீர் தரப்புக்கு ரிமாண்ட் மனுவின் நகலை கைதுக்கு முன்னதாக தில்லி காவல்துறையினர் வழங்காததால், இந்த கைது நடவடிக்கை சட்டவிரோதமாக கருதி அவரை உடனடியாக விடுவிக்க நீதிபதிகள் பிஆர் கவாய், சந்தீப் மேத்தா அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தில்லி காவல்துறையினர் பிரபீரை கைது செய்வதற்கு முன்னதாக அவரின் குடும்பத்தினருக்கோ, வழக்கறிஞருக்கோ ரிமாண்ட் மனு கொடுக்கவில்லை என்பதால், இந்த கைது நடவடிக்கையை சட்டவிரோதமாக கருதி விடுவிக்க வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஆனால், தில்லி காவல்துறையினரின் கைது நடவடிக்கையை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், அவரை நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதித்தது.

இந்த நிலையில், தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிரபீர் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவின் விசாரணை கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நீதிபதிகள் பிஆர் கவாய், சந்தீப் மேத்தா அமர்வில் நடைபெற்றது.

அப்போது, பிரபீர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். அக்டோபர் மாலை 7 மணிக்கு பிரபீர் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாள் காலை 6 மணிக்கு நீதிபதியின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். அதுவரை பிரபீர் குடும்பத்துக்கோ, வழக்கறிஞருக்கோ ரிமாண்ட் மனு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பிரபீர் தரப்புக்கு ரிமாண்ட் மனு அளிக்கப்படாமல் அவரை நீதிபதியிடம் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்தது குறித்து தில்லி காவல்துறை தரப்புக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்தது.

இதனைத் தொடர்ந்து, தில்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதித்த உச்சநீதிமன்றம், காவல்துறையின் கைதை சட்டவிரோதமாக அறிவித்து, பிரபீரை உடனடியாக விடுதலை செய்ய இன்று காலை உத்தரவிட்டது.

நியூஸ் கிளிக் நிறுவனா் பிரபீா் புா்காயஸ்தா
மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

2019 மக்களவைத் தோ்தலின் போது தோ்தல் செயல் முறையை சீா்குலைக்க, ஜனநாயகம் மற்றும் மதச்சாா்பின்மைக்கான மக்கள் கூட்டணி (பிஏடிஎஸ்) என்ற குழுவுடன் புா்காயஸ்தா சதி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அக்டோபா் 3- ஆம் தேதி புா்காயஸ்தாவுக்கு தொடர்புடைய தில்லியில் 88 இடங்களிலும், பிற மாநிலங்களில் 7 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் முடிவில் புா்காயஸ்தா, நியூஸ் கிளிக் நிறுவன மனிதவளத் துறைத் தலைவா் அமித் சக்ரவா்த்தி உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் யுஏபிஏ சட்டத்தின் கீழ் பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com